பக்கங்கள்

27 ஜனவரி 2013

அறிவுக் கண் திறக்க வேண்டியவர்களின் காம லீலை!

கிழக்கு மாகாண பள்ளிக்கூடங்களில் மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகளின் பேரில் இதுவரை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என 25 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பள்ளிக்கூடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறும் அவர், முறைப்பாடு பதிவு செய்யப்படாத சம்பவங்களும் இருப்பதால் நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் அவர் கூறினார்.தமிழ், முஸ்லிம் சமூகங்களிடமிருந்து இவ்வாறான முறைப்பாடுகள் வெளிவருவதில்லை. சிங்கள சமூகத்திடமிருந்துதான் பெரும்பாலான முறைப்பாடுகள் வந்துள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார். விசாரணைகளின் முடிவில் சிலர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அதேவேளை இன்னும் சிலர் வேறு பள்ளிக்கூடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிடுகின்றார். விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒருசிலர் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். ஆனால் சாட்சியங்கள் இல்லாத நிலையில் சிலர் நிரபராதி என விடுதலையான சம்பவங்களும் உள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டுகிறார். முறைப்பாட்டாளர்களும் சாட்சிகளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வராமையால் பள்ளிக்கூட மாணவிகளுக்கு எதிரான பாலியல் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தடைகள் காணப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களின் கட்டளைகளுக்கு அமைவாக மாணவர்கள் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றமையே இவ்வறான துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். சில நாடுகளை பின்பற்றி இலங்கையிலும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக முன்பள்ளிகள் தொடக்கம் விழிப்புணர்ச்சி விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று விழுது அமைப்பின் தலைவி சாந்தி சச்சிதானந்தம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.