இலங்கை பெண்ணை காதலிக்கும் இந்திய இராணுவ மேஜரை, 16 லட்சம் இந்திய ரூபாய் பயிற்சி செலவை செலுத்தி விட்டு வெளியேறுமாறு, இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய இராணுவத்தின் சிக்னல் பிரிவில் பணியாற்றிய, மேஜர் விகாஸ் குமார், இலங்கையை சேர்ந்த, எம்.பில்., மாணவி, அர்னிலா ரங்கமலி குணரத்னே என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணை மணக்க அனுமதிக்குமாறு கேட்டபோது, இராணுவம் அனுமதி தரவில்லை.
இதனால், தன்னை பணியிலிருந்து விலக அனுமதிக்குமாறு, விகாஸ் குமார் கோரினார். எனினும், அவரின் கோரிக்கை கவனிக்கப்படவே இல்லை. கர்நாடக மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். இராணுவத்திற்கும், விகாஸ் குமாருக்கும் இடையே நடந்த நீதிமன்ற மோதல், இரண்டு ஆண்டுகள் நீடித்தது.
இறுதியில், நீதிமன்ற உத்தரவின் படி, விகாஸ் குமாரின் பணி ஓய்வு, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், இராணுவ வீரர்களுக்கான பலன்கள் பெற வேண்டுமானால், இந்திய இராணுவ கல்வி நிறுவனத்தில், விகாஸ் குமாருக்கு அளிக்கப்பட்ட பயிற்சிக்கான தொகை, 16 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என, இராணுவம் நிபந்தனை விதித்தது.
இதை எதிர்த்து, விகாஸ் குமார், நீதிமன்றத்தை நாடினார். அதில், தான் ஏற்கனவே, ஐந்து ஆண்டுகள், இராணுவத்தில் பணி செய்துள்ளதால், பணப் பலன்கள் கிடைக்க தகுதி உடையவர் எனவும், தன்னிடம் பயிற்சி கட்டணத்தை வசூலிக்க கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.
எனினும், இராணுவம் தரப்பில், பயிற்சி கட்டணம், 16 லட்சம் ரூபாய் மற்றும் திருமண பத்திரமும் கொடுத்தால் தான், பணி ஓய்வு பலன்கள் கிடைக்கும் என, உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காதலிக்காக, பணத்தை திரட்டும் பணியில், மேஜர் விகாஸ் குமார் ஈடுபட்டுள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.