சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனுராதபுர மருத்துவமனையின் இரத்த வங்கியில் பணியாற்றும் மருத்துவர் சிவசங்கர், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழில் பத்திகளை எழுதி வருபவர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தில் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட பெண் ஒருவர், இராணுவத்தில் இருந்து விலக விரும்பிய நிலையில், அது தொடர்பாக பேசுவதற்கு உறவினர்களுடன் சென்றிருந்த மருத்துவர் இரத்தினசிங்கம் சிவசங்கர், சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
பாரதிபுரம் இராணுவ முகாமுக்குள் அனுமதியின்றி நுழைந்து, புதிதாக சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண் படையினருடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உரையாடியதாக அவர் மீது சிறிலங்கா இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
கைது செய்யப்பட்ட மருத்துவர் சிவசங்கர் மாங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, தற்போது தீவிரவாத தடுப்பு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மருத்துவர் சிவசங்கர் முன்னர் யாழ்.போதனா மருத்துவமனையில் பணியாற்றியவர் என்றும், அப்போது உதயன் நாளிதழில் பத்திகளை எழுதிவந்தவர் என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.