பின்லேடன் மரணத்தோடு சர்வதேச தீவிரவாதம் முடிந்து போய் விட்டது என்று யாராவது கருதுவார்களேயானால் அது மிகப் பெரிய முட்டாள்தனமாகத்தான் இருக்க முடியும். காரணம், இனிமேல்தான் பயங்கரவாதம் மேலும் வலுவடையும் என்று கருதப்படுகிறது.
பின்லேடன் போய் விட்டாலும், அவர் ஏற்படுத்தி வைத்துள்ள அழுத்தம் திருத்தமான கோட்பாடுகள், வெற்றி பெற்ற முந்தைய தாக்குதல்களின் தாக்கம் உலகம் முழுவதும் விரவியுள்ள பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு இனிமேல் மிகப் பெரிய தத்துவமாக, முன்மாதிரியாக இருக்கப் போகிறது. லேடனை தியாகியாக வரித்து அவர்கள் மேலும் உத்வேகத்துடன் செயல்படும் சாத்தியக்கூறுகள்தான் அதிகம் உள்ளன.
நவீன உலகில், அமெரிக்கா மீது எந்த நாடுமே கை வைத்திராத வரலாற்றை முறித்துப் போட்டவன் பின்லேடன்தான். அமெரிக்கா மீதான அந்தத் தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து இன்று வரை அமெரிக்கர்கள் மீளவில்லை.
இந்த நிலையில் பத்து ஆண்டு போராட்டத்திற்குப் பின்னர் லேடனை வீழ்த்தி ஓய்ந்துள்ளது அமெரிக்கா. ஆனால் இனிமேல்தான் அமெரிக்காவுக்கு பெரும் பெரும் கண்டங்கள் காத்துள்ளன என்கிறார்கள் பயங்கரவாதத்தின் ஆழம் குறித்து அறிந்தவர்கள்.
பின்லேடன் இனி உலக தீவிரவாதிகளின் கடவுளாக பார்க்கப்படப் போகிறார்கள், தீவிரவாத எண்ணம் கொண்டோர். லேடனை மனதில் கொண்டு புதுப் புதுத் தாக்குதல்களில் தீவிரவாதிகளும், தீவிரவாத அமைப்புகளும் இறங்கக் கூடும். தீவிரவாதிகளின் அசைக்க முடியாத ஹீரோவாக அவன் உருப்பெறலாம்.
உலகம் முழுவதும் முன்பை விட பலமாகவே தற்போது தீவிரவாத அமைப்புகள் விரவிக் காணப்படுகின்றன. முன்பை விட அதி நவீனமான சாதனங்கள், ஆயுதங்களுடன் அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றன. அதி நவீன உத்திகள், சாதனங்கள் என காணப்படும் அவர்களுக்கு இனிமேல் பின்லேடன் ஒரு மானசீக குருவாக விளங்கக் கூடும்.
பின்லேடன் விட்டு விட்டுப் போயுள்ள 'லிகசியை' அவர்கள் கட்டிக் காக்க முயல்வார்கள். முன்பை விட மிகவும் பலமான எதிரியாக அமெரிக்காவை இனிமேல் தீவிரவாதிகள் பார்ப்பார்கள்.
தாக்குதலில் அல் கொய்தாவின் நம்பர் டூ தலைவரான ஈமான் அல் ஜவாஹிரி கொல்லப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே இனி அவர் அல் கொய்தாவின் தலைவராக செயல்படுவார். அவரது தலைமையில் அல் கொய்தா புதுப் புதுத் தாக்குதல்களில் ஈடுபடக் கூடும்.
பல முக்கியத் தலைவர்களை அல் கொய்தா இழந்திருந்தாலும் கூட தாக்குதல்களை வகுத்து அதை செயல்படுத்தும் திறமையுடன் கூடியவர்கள் பலர் அந்த அமைப்பில் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், பின்லேடன் கொலைக்குப் பழி வாங்க உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகள் இனி ஒருங்கிணைந்து செயல்படக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
அதை விட முக்கியமாக அமெரிக்காவைப் பழிவாங்க அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமான, அமெரிக்காவின் தோழமை நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
ஜார்ஜ் புஷ் காலத்தில் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான போர் இனிமேல்தான் முழு வீச்சில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையைச் சொல்வதானால் இனிமேல்தான் உலக நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
தீவிரவாத நூலில், ஒரு அத்தியாயம்தான் தற்போது முடிந்துள்ளது. முற்றும் போடப்படவில்லை. அது முடியவும் முடியாது என்றே கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.