பக்கங்கள்

28 மே 2011

முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரைக்கு கிழக்கு பல்கலைக்கழகம் கெளரவம்.

முன்னாள் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் செல்லையா இராஜதுரைக்கு கிழக்கு பல்கலைக்கழகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரிக்கு அவர் விஜயம் செய்த போது கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அவரை வரவேற்று விருது வழங்கி கௌரவித்தனர்.
இராஜதுரை பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சராக இருந்த காலத்திலேயே அந்த அமைச்சினால் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. பௌதிக வளம் நிறைந்த விபுலாந்த இசைநடனக்கல்லூரி தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
இதேவேளை மட்டக்களப்புக்கு அண்மையில் வருகை தந்து அங்கு தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை சமய சமூக நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
சுமார் 25 வருடங்களின் பின்பு மீண்டும் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள மட்டக்களப்பு தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான செல்லையா இராஜதுரை நேற்று கொக்கட்டிச்சோலை பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
மண்முனைத் துறை ஊடாக படகில் விஜயம் செய்த அவர் தான் அமைச்சராக இருந்தபோது குறிப்பிட்ட துறைக்கு பாலம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கியிருந்தார் ஆனால் நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக இந்த பாலம் அமைக்கப்படவில்லை இதற்காக தனது கவலையையும் அப்போது அவர் வெளியிட்டார்.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மற்றும் மகிழடித்தீவு கண்ணகை அம்மன் ஆலயங்கில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டதோடு முதலைக்குடா மகாவித்தியாலயம் முனைக்காடு அரசினர் பாடசாலை மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும் விஜயம் செய்து மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றியதோடு அப்பிரதேச பிரமுகர்களுடனும் கலந்துரையாடினார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஸ்ரீ சத்திய சாயி பாபா சமித்திகளினால் ஏற்பாடுசெய்யப்பட்ட பஜனை வழிபாடுகளிலும் அவர் கலந்துகொண்டார்.
கடந்த இரு வாரங்களாக மட்டக்களப்பில் தங்கியிருந்த இவர் சமூக சமய இலக்கியங்கள் அரசியல் பிரமுகர்களையும் தனது ஆதரவாளர்களையும் சந்தித்து வருகின்றார்.
அரசியலிலிருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில் அரசியல் தொடர்பாக கருத்துக்கள் கூறுவதை தவிர்த்து வருகிறார். இருப்பினும் தமிழ் மக்களின் அவல நிலை தொடர்பாக தனது கவலையை வெளியிட்டுள்ள அவர் ‘பெரியவர் தந்தை செல்வா அன்று கூறியது போல் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று இந்தச் சந்தர்ப்பத்தில் சுருக்கமாக கூறினார்.
1950ஆம் ஆண்டுகளிலிருந்து இலங்கை தமிழரசுக்கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட வந்த அவர் முதலில் மட்டக்களப்பு மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
சொல்லின் செல்வன் என்ற பட்டத்தை பெற்ற இராஜதுரை தமிழரசுக்கட்சியின் சிறந்த பேச்சாளராக திகழ்ந்தார்.
1956ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் போட்டியிட்ட இராஜதுரை மட்டக்களப்பு தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் 1977ஆம் ஆண்டுவரை நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் மட்டக்களப்பு தொகுதியில் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக 33ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.