அண்மையில் தமிழகத்தில் இந்திய காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்விக்கு விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் நெடியவன் தலைமையிலான புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தான் வலுவான காரணம் என நம்பியுள்ள இந்திய புலானாய்வு அமைப்பு நெதர்லாந்து அரசுக்கு கொடுத்துள்ள அழுத்தம் காரணமாகவே நெடியவன் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமான த டெய்லி மிரர் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குமரன் பத்மநாதனின் தலைமையை நெடியவன் உட்பட தமிழகத் தலைவர்களான வைகோ, நெடுமாறன், சீமான் ஆகியோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் வைகோ, நெடுமாறன், சீமான் ஆகியோர் தலைமையிலான தனிப்பட்ட பிரச்சாரங்கள் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தன.
இந்த பிரச்சாரம் தான் காங்கிரசுக்கு தோல்வியை கொடுத்தது. தமிழகத்தில் போட்டியிட்ட 60 காங்கிரஸ் உறுப்பினர்களில் 10 பேர் கூட வெல்லவில்லை. சிறீலங்கா அரசுக்கு ஆதரவளித்து விடுதலைப்புலிகளை வஞ்சம் தீர்த்த காந்தி குடும்பத்திற்கு மீண்டும் விடுதலைப்புலிகள் தக்க பதிலடியை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள அலையும் காந்தி குடும்பத்தை கலக்கத்தில் தள்ளியுள்ளது. எனவே தமிழகத்தின் இந்த எழுச்சிக்கு நெடியவன் தலைமையிலான அணியே காரணம் என இந்திய காங்கிரஸ் கட்சியும், றோ புலனாய்வு அமைப்பும் நம்புகின்றன.
இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசுக்கு இந்திய காங்கிரஸ் அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே நெடியவன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடியவன் தொடர்பான தகவல்களை சிறீலங்கா அரசின் கைகளில் இருக்கும் குமரன் பத்மநாதனே காங்கிரஸ் அரசுக்கு வழங்கியிருந்தார். அதன் பின்னர் அந்த தகவல்களை இந்திய புலனாய்வுத்துறை நெதர்லாந்து அரசுக்கு வழங்கியுள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.