வன்னியில் இடம்பெற்ற போரில் இறந்தவர்களையும், தப்பியவர்களையும் நாம் மதிக்கவேண்டும் எனில் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி ஜோலந்தா போஸ்ரர் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் இரண்டாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையி;ல் தெரிவித்துள்ளார்.
நேற்று (17) வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவில் இடம்பெற்ற போர் நிறைவடைந்து இன்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்த நேரத்தில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என நாமும், போரில் தப்பியவர்களும் வேண்டிக்கொள்கிறோம்.
2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்துவிட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்தபோதும், அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு அனுமதிக்கவில்லை. அது தற்போதும் எனது நினைவுகளில் உள்ளது.
சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், சிறீலங்கா அரசு பொதுமக்கள் மீது எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளபோதும், சிறீலங்கா அரசு தொடர்ந்து அதனை மறுத்துவருகின்றது.
ஒரு பொதுமக்களும் கொல்லப்படவில்லை என அது தெரிவித்துவருகின்றது. சிறீலங்கா அரசின் இந்த பொய் போரில் தப்பியவர்களின் உரிமைகளை மறுப்பதாகும். அங்கு கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு மரண நிகழ்வுகளை கொண்டாட முடியாத நிலையிலும், இறப்புச் சான்றிதழ்களை பெற முடியாத நிலையிலும் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர்.
என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்த விடயம் என்னவெனில், போரின் இறுதி மாதங்களில் வைத்தியசாலைகள் மீது சிறீலங்கா அரசு திட்டமிட்ட முறையில் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது தான்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் நாள் சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. சிறீலங்கா அரசு பொதுமக்களை எவ்வாறு குறிவைத்து படுகொலை செய்துள்ளது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
இந்த வைத்தியசாலை மீது 16 மணிநேரம் தொடர் எறிகணை வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அனைத்துலக மன்னிப்புச்சபை தனது கொள்கையிலும், உண்மைத்தன்மையிலும் உறுதியாக நின்று, சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த அனைத்துலக விசாரணைகளை கோரவேண்டும் என ஒரு இளம் பெண் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஐ.நா அறிக்கையை சிறீலங்கா அரசு நிராகரித்துள்ளது. ஆனால் உண்மை வலிமையானது. சிறீலங்கா அரசு மறைக்கமுற்பட்டபோதும், ஐ.நா அறிக்கை உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
எனவே வன்னியில் இடம்பெற்ற போரில் இறந்தவர்களையும், தப்பியவர்களையும் நாம் மதிக்கவேண்டும் எனில் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.