யாழ். நாவாந்துறைப்பகுயில் சிறீலங்கா படையினரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரிகளின் உதவியுடன் சிறீலங்காவின் ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்று இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் சிலரை கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு அந்தப் பிரதேச கிராம அலுவலரும் உடந்தையாக இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பிராந்திய மக்களை அழைத்த சிறீலங்கா படையினர், உங்கள் பிள்ளைகளுக்கு 17 ஆயிரம் ஊதியத்துடன் வேலை பெற்றுத் தருகின்றோம் எனவும், வேலையற்ற பெண் பிள்ளைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என அறிவுறுத்தியதன் பின்னணியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
படையினரது இந்த தந்திரோபாய அறிவித்தலைத் தொடர்ந்து மக்கள் தமது பெண் பிள்ளைகளுடன் படை முகாமுக்கு சென்றுள்ளனர். அவர்களை நேர்முகத் தேர்வு செய்த படையினர் குறிப்பிட்ட சிங்கள நிறுவன அதிகாரிகளுக்கு கையளிப்பதாக அழைத்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கும் மக்கள், அதன் பின்னர் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என தெரியாது எனக் கூறுகின்றனர்.
குறிப்பாக அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாது என்றும், அவ்வாறான ஒரு தொழிற்சாலையில் தான் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளதாக மட்டும் பெற்றோர் கூறுகின்றனர்.
இதில் 15 அகவைக்கு உட்பட்ட சில சிறுமிகளும் உள்ளடங்குவதாகவும், அவர்களைக்கூட வேலை பெற்று தருவதாக கூறி ஆக்கிரமிப்புப் படையினர் அழைத்து சென்றுள்ளதாகவும் யாழ் செய்தியாளர் கூறுகின்றார். அத்துடன், 16 அகவைக்கு உட்பட்டவர்களை பணிக்கு அமர்த்துவது சட்டத்திற்கு முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறீலங்கா அரசாங்கம் தனது நிகழ்சி நிரலில் முக்கிய நிரலிட்டுள்ள விடயம் என்னவெனில், தமிழ் மக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தம்மை தனி இனமாக பிரகடனப்படுத்தக் கூடிய கலாசார, பண்பாட்டு, மொழி, மற்றும் நிலப்பரப்பு போன்ற அடையாளங்களை ஊடுருவி அழிப்பதாகும்.
இவ்வாறான கடத்தல்கள் மூலம் தமிழ் இளம் பெண்களிடம் சிங்கள கலப்பு அடையாளம் ஒன்றை உருவாக்கி, அதனை தமிழர் தாயகத்துக்குள் ஊடுருவவிட்டு தனித் தமிழர் பகுதிகள் என தற்போது கணிக்கப்படும் பகுதிகளை இல்லாது ஒழிப்பதற்கான திட்டங்கள் கச்சிதமாக வகுக்கப்பட்டுள்ளன. எனவே இதை தடுக்கும் முகமான நீண்ட கால வேலை திட்டங்கள் தமிழர் தாயகத்திற்கு மிக அவசியம் என்பதை இச்சம்பவம் கோடிட்டு காட்டுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.