யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பௌத்த சங்கம் ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை செய்திகள் கூறுகின்றன. ஆனால் இவ்வாறான சங்கம் ஒன்றிற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகின்றது. இது தொடர்பாக தெரியவருவதாவது.
இந்தச் சங்கத்தின் தலைவராக அமித்புஸ்பகுமார என்ற மாணவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் துணைத் தலைவராக லதீப், ஹாசினி சசித்ரா செயலாளராகவும், தங்கராஜா பிரதீப் துணைச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று ஆங்கில ஊடகங்கள் தெரிவித்தன. யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக பௌத்த சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவை குறிப்பிடுகின்றன.
எனினும் பல்கலைக் கழக வட்டாரங்களில் இருந்து பௌத்த சங்கம் உருவாக்கப்பட்ட செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.அதற்கான முயற்சிகள் சில இடம்பெற்றன என்பதை மாணவர்கள் சிலர் உறுதிப்படுத்தினர். “சிங்கள மாணவர்கள் சிலர் சேர்ந்து வெசாக் கொண்டாடுவதற்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தினர். அந்த அமைப்பின் விவரங்கள் துணைவேந்தருக்கும் சமர்ப்பிக்கப் பட்டதாகத் தெரிகிறது. ஆனால், அதனை அவர் அங்கீகரித்தாரா? இல்லையா? என்பது தெரியாது” என்றார் மாணவர் ஒருவர். பல்கலைக்கழகத்துக்குள் வெசாக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு சிங்கள மாணவர்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள், “குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் தவிர்ப்பது நல்லது” என்ற அறிவுரையை அடுத்துக் கைவிடப் பட்டதாகவும் ஒரு தகவல் தெரிவித்தது.
பல்லைக்கழகத்துக்குள் பௌத்த சங்கம் ஒன்றை அமைப்பதன் பின்னணியில் படையினர் செயற்படுகின்றனர் என்றும் மற்றொரு தகவல் தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.