வெலிக்கடைச் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலவரத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாகவும், ஆனால் அவர் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் அல்ல என்று சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
“சிறைக்கலவரத்தில் கொல்லப்பட்ட 27 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சிறையில் இருந்து தப்பிச்சென்றவர்கள் மற்றும் காணாமற்போன ஆயுதங்களைக் கணக்கெடுக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
கொல்லப்பட்டவர்களில் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் எவரும் இல்லை.
அவர்கள் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும், மகசீன் விளக்கமறியல் சிறைச்சாலையிலும் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வெலிக்கடையில் இல்லை.
தமிழர் ஒருவரும் இந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டுள்ளதாக நம்புகிறேன். ஆனால், அவர் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் அல்ல.
இந்தக் கலவரம் இடம்பெற்ற போது 3598 கைதிகள் வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இது சிறைச்சாலையின் கொள்ளளவை விட மிகவும் அதிகமாகும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடைச் சிறைக்கலவரத்தல் கொல்லப்பட்ட 27 பேரில், 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களாவர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்தவர்கள் என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கோட்டே ரஜமகா விகாரையில் இரு பௌத்த பிக்குகளை கொலை செய்தவரும் வெலிக்கடைச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.