ராதிகா சிற்சபைஈசன் 2012ன் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தெரியப்பட்டார். ஸ்காபரோ புதிய ஜனநாயகக்கட்சி பா. உ. ராதிகா சிற்சபைஈசன் (ஸ்காபரோ - ரூஜ் ரிவர்) 'நௌ' (NOW) சஞ்சிகையால் இன்று 2012ன் 'சிறந்த உள்ஊர்பாராளுமன்ற உறுப்பினர்' விருது வழங்கி மதிப்பளிக்கப்பெற்றார்.
'இந்த விருது பெறுவதையிட்டு நான் மிகுந்த பெருமையடைவதோடு ஆழ்ந்த நன்றியையும் தெரிவிக்கிறேன்" என தெரிவித்த ராதிகா சிற்சபைஈசன், "அதற்கு முக்கிய காரணம் இந்த விருதுக்காக எனக்கு வாக்களித்தவர்கள் ஸ்காபரோ மற்றும் ரொரன்ரோ பெரும்பாக மக்களே" என கூறினார்.
ரொரன்ரோவிலிருந்து வாராந்தம் வெளிவரும் 'நௌ' சஞ்சிகை, 'ரொரன்ரோவில் சிறந்தது' (Best of Toronto) என்ற பட்டியலை வருடாந்தம் வெளியிடுகிறது. அதிலே ரொரன்ரோ பெரும்பாகம் வாழ் மக்கள் பல்வேறு பிரிவுகளிலே தங்கள் தெரிவுக்கு வாக்களிக்கிறார்கள்.
கடந்த காலத்தில் 'சிறந்த உள்ஊர் பாராளுமன்ற உறுப்பினர்' விருது பெற்றவர்களிலே புதிய ஜனநாயகக்கட்சியை சேர்ந்த ஜக் லேய்ற்றன், ஒலிவியா சௌ ஆகியோரும் அடங்குகின்றனர்.
'நான் தொடர்ந்தும் ஸ்காபரோவாழ் மக்களுக்காக குரல்கொடுப்பேன்.
தரமான சுகநல பாதுகாப்பு, ஓய்வுகால காப்புறுதி, சமத்துவமும், பசுமையும், செல்வச்செழிப்பும் மிக்க தேசம் போன்ற கனேடிய மக்களிற்கு முக்கியமான விடயங்களுக்காக போராடுவேன்" என ராதிகா சிற்சபைஈசன் மேலும் கூறினார். இன்று ரொரன்ரோ நகர மத்தியில் இடம்பெற்ற காலை விருந்து நிகழ்வொன்றில் தனது விருதை ஏற்றுக்கொண்ட ராதிகா சிற்சபைஈசன் 'நௌ' சஞ்சிகைக்கும், வாக்களிப்பில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.