புலிகளுக்கு பயந்தே அதிகாரப்பகிர்வு கொள்கையும், மாகாணசபை முறைமையும், பதிமூன்றாம் திருத்தமும் கொண்டு வரப்பட்டது: இன்று புலிகள் இல்லை; ஆகவே மாகாணசபையும், பதிமூன்றும் தேவை இல்லை என இன்று காலை வேறொரு இடத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச சொல்லியிருப்பதாக அறிந்தேன். இது நல்ல வேடிக்கை.
இன்று தமிழ் தலைமைகள் நாம், ஐக்கிய இலங்கைக்குள்ளே தீர்வை கோருகிறோம். நேர்மையான அதிகாரப்பகிர்வு என்ற நிபந்தனையுடன் ஒன்றுப்பட்ட இலங்கையை கோருகிறோம். நாட்டை பிரிக்க வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. ஆயுத போராட்டம் நடத்தவில்லை.
புலிகளுக்கு பயந்துதான் அதிகாரப்பகிர்வு வந்தது என்று சொன்னால் என்ன அர்த்தம்? அதிகாரப்பகிர்வு வேண்டும் என்றால் புலிகளை மீண்டும் கொண்டு வாருங்கள் என்றுதானே அர்த்தம். ஆகவே, விமல் வீரவன்ச அதிகாரப்பகிர்வை பெறுவதற்காக, ஆயுதப்போராட்டம் நடத்துங்கள் என்று எமக்கு சொல்கிறார். நாட்டை பிரியுங்கள் என்று சொல்கிறார்.
1980களில் புலிகள் உருவானார்கள். 1987களில், மாகாணசபை முறைமையும், பதிமூன்றாம் திருத்தமும் உருவானது. ஆனால், அதிகாரப்பரலாக்கல் கொள்கை என்பது இந்த நாட்டில், புலிகளுக்கு முன்னமேயே உருவாகி இருந்ததை, தெரிந்தும் தெரியாததுபோல் சிறுபிள்ளைதனமாக விமல் வீரவன்ச பேசுகிறார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
"அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்" என்ற தலைப்பில் இரண்டாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. சுமந்திரன் எம்பி, அசாத் சாலி, சிறிதுங்க ஜெயசூரிய, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோரும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
1958 ல் பண்டா-செல்வா ஒப்பந்தம், 1965 ல் டட்லி-செல்வா ஒப்பந்தம் என்பவை அதிகாரப்பரலாக்கல் கொள்கையின் அடையாளங்கள். அப்போது புலிகள் இல்லையே. அதுமட்டும் அல்ல, சுதந்திரத்துக்கு முன்னர், 1940 களில், கண்டி சிங்கள பிரதானிகள், யாழ்ப்பாணத்திற்கு சென்று இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி முறையே தேவை என்று கூறி அதற்கு தமிழர்களின் ஆதரவை கோரினார்கள்.
சோல்பரி கமிசனிடம் கண்டிய சிங்களவர்கள் சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தார்கள். அன்றைய தமிழர்களுக்குத்தான் முன்யோசனை மூளை இல்லாமல் போய்விட்டது. ஆனால், சமஷ்டி கோரிக்கையை முன் வைத்த சிங்களவர்கள் புலிகளா? அதை வேண்டாம் என மறுத்த தமிழர்கள் புலிகளா? உண்மையில் அன்று புலியும் இருக்கவில்லை, பூனையும் இருக்கவில்லை.
இந்த நாட்டின் சரித்திரம் எமக்கு தெரியாது என விமல் வீரவன்ச நினைப்பது மடத்தனம். நாங்கள் நேற்று முதல் நாள்தான் மீண்டும் பிறந்து வந்துள்ளோம் என அவர் நினைப்பதும் மடத்தனம். 1940, 1950, 1960 களில் இந்த நாட்டில் நடந்தவை எங்களுக்கு தெரியும். எமக்கு நீங்கள் சரித்திர பாடம் புகட்ட வேண்டாம். உமது இனவாத தேவைகளுக்காக, அதிகாரப்பரவல்லாக்கலை எதிர்க்கிறீர். அதற்காக பொய்களை அவிழ்த்து விடுகிறீர்.
புலிகளுக்கு பயந்துத்தான், அதிகாரப்பகிர்வு கொள்கை என்றால், இன்று அதிகாரப்பகிர்வை பெற்றுக்கொள்ள மீண்டும் புலிகள் வரவேண்டுமா? புலிகள் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்று விமல் வீரவன்ச சொல்கிறாரா என நான் கேட்கிறேன்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது அதிகாரப்பகிர்வு. இதைதான் உலகம் திரும்ப, திரும்ப சொல்கிறது. ஆனால், மகிந்த அரசாங்கம் அதிகாரத்தை பகிர்ந்து தர தயார் இல்லை. பிரதம நீதியரசருக்கு எதிரான பிரேரணை மூலம் அரசாங்கம் உலகத்துக்கு வழங்கிய செய்தி இதுதான்.
இன்று திவி நெகும சட்டம், மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிக்கிறது. அதை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையின் மூலம் சட்டமாக்க முடியாது என பிரதம நீதியரசர் தெளிவாக தீர்ப்பு வழங்கிவிட்டார். ஆகவே வேண்டுமானால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம், பதின்மூன்றாம் திருத்தத்தில் கை வையுங்கள். சர்வஜன வாக்கெடுப்பு நடத்துங்கள், உங்களுக்கு முடியுமானால் திருத்தத்தையே திருத்துங்கள் என்று உயர் நீதிமன்ற தீர்ப்பு சொல்லிவிட்டது.
இதனால்தான் இவர்களுக்கு இன்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக மீது கடும் கோபம். ஏனென்றால், சத்தமில்லாமல் பதின்மூன்றின் மீது கைவைக்க நினைத்தவர்களுக்கு அதை பகிரங்கமாக செய்ய வேண்டிய நிலைமையை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக ஏற்படுத்திவிட்டார். உலகம் முழுக்க போய், பதிமூன்றிற்கு மேலே போட்டு தருகிறேன் என்று சொன்னவர்கள், இன்று இருப்பதையும் திருட முயல்கிறார்கள் என்பது பகிரங்கமாகிவிட்டது.
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று பதின்மூன்றில் கைவைத்தால், அது இந்த அரசாங்கத்துக்கு கேடுகாலம். உலகத்தின் முன் இனி இவர்களுக்கு எந்த ஒரு சமாதானத்தையும் இனிமேல் சொல்ல முடியாது. இந்த தர்மசங்கட நிலைமைக்கு அரசாங்கத்தை தனது தீர்ப்பின் மூலம் தள்ளியுள்ளவர், ஷிராணி பண்டாரநாயக்க. அந்த நிலைமைக்கு ஷிராணி பண்டாரநாயக்கவை கொண்டு வந்தவர்கள் நாங்கள்.
இங்கே அமர்ந்துள்ள, மனோ கணேசன், அசாத் சாலி, சுமந்திரன், விக்கிரமபாகு, சிறிதுங்க மற்றும் மாவை சேனாதிராசா ஆகிய நாங்கள்தான், திவி நெகுமவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். அதனால்தான் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. எனவே இன்று நாங்கள் இந்த தீர்ப்பின் காரணமாக தமிழ், முஸ்லிம் மற்றும் நல்லெண்ணம் கொண்ட சிங்கள மக்களுடன் சேர்ந்து மகிழ்சியை கொண்டாடுகிறோம்.
இன்று தீர்ப்பு வழங்கிய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக மீது அரசாங்கம் கை வைக்கிறது, அதை எதிர்த்து நாம் போராடுவோம். இன்றைய சூழலில் அவருக்கு எங்கள் உறுதியான ஆதரவை நாம் தெரிவிக்கிறோம். தமிழ், முஸ்லிம் மக்களும் இதையே செய்ய வேண்டும்.
எஜமானுக்கு கேட்கவேண்டும், அவர் எதையாவது மேலே போட்டு தரவேண்டும் என்ற நப்பாசை காரணமாக, இன்று சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், ஷிராணி பண்டாரநாயகவுக்கு எதிராக பேரினவாதிகளைவிட அதிக சப்தம் போடுகிறார்கள்.
பிரதம நீதியரசருக்கு எதிராகவும், தொடர்ந்து திவிநேகும சட்டமூலத்திற்காக பதிமூன்றாம் திருத்தத்தின் மீதும் கை வைக்கும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும், தமிழ் பேசும் மக்களை காட்டிகொடுக்கின்றார்கள் என்பது உண்மை. இவர்களுக்கு விமோசனம் ஒருபோதும் இல்லை என்பதும் உண்மை. இதை தமிழ் பேசும் மக்கள் உரிய வேளையில் புரிய வைப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.