பக்கங்கள்

01 நவம்பர் 2012

குற்றப் பிரேரணையில் கையெழுத்திடுவோர் அதிகார பகிர்விற்கு எதிரானவர்கள்!

"நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு திவிநெகும என்ற சட்டமூலத்தை அடிப்படையாக கொண்டது. இந்த சட்டமூலம் 13ஆம் திருத்தத்தை வலுவிழக்க செய்யும் நோக்கத்தை கொண்டது. எனவே பிரதம நீதியசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான அரசாங்கத்தின் குற்றப் பிரேரணையில் கையெழுத்து இடுகின்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகார பகிர்விற்கு எதிரானவர்கள்" என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இந்த குற்றப் பிரேரணையில் இன்று வரை சுமார் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து இட்டுள்ளார்கள் என தெரிய வருகிறது.இந்த 120 பேரிலும் தொடர்ந்து கையெழுத்து போடப்போகின்றவர்களிலும் எத்தனை தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற போகின்றார்கள் என்று தமிழ் பேசும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த குற்றப் பிரேரணையில் கைச்சாத்திடும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்கள் மனதில் தமக்கு எதிராக தாமே குற்றப் பிரேரணையை நிறைவேற்றிகொள்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதில் இரண்டு கருத்துக்கு இடம் கிடையாது. பிரதம நீதியரசரை ஜனாதிபதி நியமிக்க முடியும். ஆனால், பதவி விலக்க முடியாது. அதனால் தான் இந்த குற்றப் பிரேரணை. இதன் மூலம் அவரை பதவி விலகச் செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்த சிக்கல் அதிகார பகிர்வில் கை வைக்கும் சட்டமூலத்தால் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான தீர்ப்பு சபாநாயகரிடம் நாளை கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் ஒரு மனுதாரரான நான், நமது மனு மீதான விசாரணையின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கிறேன். எது எப்படி இருந்தாலும், இந்த விவகாரம் தமிழ் பேசும் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. தமிழ் பேசும் மக்களுக்கே அதிகாரப் பகிர்வு அவசியப்படுகின்றது. எனவே இந்த கட்டத்தில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக கொண்டுவரப்படும் குற்றப் பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திடும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். கையெழுத்து போடும் ஒவ்வொருவரையும் தமிழர்கள் தூர விலத்தி வைக்க வேண்டும். இந்த பிரேரணையில் தமிழ் உறுப்பினர்கள் கைச்சாத்திடுவது வரலாற்று துரோகமாகும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.