இலங்கையின் வடக்கே பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு அரசதரப்பு முன்வைத்த ஆட்சேபணையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் விவசாயிகள் சிலர் இந்த வழக்குகளை 2003-ம் ஆண்டில் தாக்கல் செய்திருந்தனர்.
பலாலி பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களில் 40 சதவீதமானோர் அங்கு மீள்குடியேற்றப்பட்டுவிட்டதாகவும், அங்கு தொடர்ந்தும் மீள்குடியேற்றம் நடந்துவருவதால் இந்த மனுக்களை தொடர்ந்தும் விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அரசதரப்பு சட்டத்தரணி வாதிட்டார்.
இதனை எதிர்த்து வாதிட்ட மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணி, பலாலி பிரதேசத்தை அதியுயர் பாதுகாப்பு வலயமாக அரசு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கவில்லை என்றும், அதனால் அந்தப் பகுதியை அதியுயர் பாதுகாப்பு வலயமாக கருதி அங்கு இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயம் காரணமாக சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
´இதனால் 60 வீதத்துக்கும் அதிகமான விவசாயிகளும் 30 வீதத்துக்கும் அதிகமான மீனவர்களும் தமது தொழில்களை இழந்துள்ளனர். அரசு கூறுகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன´ என்று சுட்டிக்காட்டினார் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி.
எனவே மக்கள் தமது சொந்த வதிவிடங்களுக்குச் சென்று வாழ்வதற்கு அனுமதி வழங்கும் தீர்ப்பை வழங்குமாறு மனுதாரர்கள் தரப்பு கேட்டுக்கொண்டது.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதியரசர்கள், வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்கினர்.
இதன்படி வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மார்ச் 11-ம் திகதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம், அந்த தினத்துக்குள் அரசதரப்பு ஆட்சேபணைகளை முன்வைக்குமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.