தமிழ்த் தேசியப் பற்றாளரும் நீண்ட காலமாகப் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளருமாக அயராது தமிழ் மண்ணின் விடுதலைக்காகச் செயற்பட்டுவந்த 'பருதி' என்று பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட திரு நடராஜா மதீந்திரன் அவர்கள் நவம்பர் 8ம் நாள் 2012 வியாழக்கிழமையன்று சிறிலங்காவின் நயவஞ்சகர்களால்; சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திரு.பருதி அவர்களின் இழப்பு ஈழத் தமிழருக்குப் பேரிழப்பாகும்.அவரின் இழப்பினால் துயருறும் அவரின் குடும்பத்தாருடனும் உலகத் தமிழருடனும் கனடியத் தமிழர் தேசிய அவை தமது துயரைப் பகிர்ந்து கொள்வதுடன் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
சிறிலங்காவானது ஈழத்தில் நம் தாயக உறவுகளைப் படுகொலை செய்தும் ஆயுத முனையில் அடக்கி இராணுவக் கட்டுப்பாட்டிலும் புலனாய்வாளர்களின் பிடியிலும் வைத்திருப்பதுபோல் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களையும் அடக்கியாழும் நோக்கிலேயே திரு. பருதி அவர்களின் இப்படுகொலை நடந்தேறியுள்ளது.
இன்று சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் தொடர்ச்சியான அரசியல் செயற்பாட்டின் காரணமாகச் சீற்றம் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசானது சர்வதேச மட்டத்தில் பல அழுத்தங்களைச் சந்தித்து வரும் இவ்வேளையில் புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாடுகளின் வீச்சைக் குறைக்கும் நோக்குடனும் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் நோக்குடனுமே இப்படுகொலையைச் செய்துள்ளது.
புலம்பெயர் தமிழ் மக்களாகிய நாம் எந்த அச்சுறுத்தலையும் தாண்டி எமது செயற்பாடுகளை இன்னமும் வீச்சுடனும் ஓர்மத்துடனும் செய்து தமிழர் மீது நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலையைச் சர்வதேச மட்டத்தில் எடுத்துச்சென்று மாவீரர்களினதும் தமிழ் மக்களினதும் இலட்சியத்தை அடையும்வரை அயராது செயற்படுவோமென உறுதி எடுத்துக்கொள்வதுடன் சிறிலங்கா அரசின் எல்லை மீறிய இப்படியான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அத்தோடு இப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை பிரான்ஸ் காவல்துறை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமெனப் பிரான்ஸ் காவல்துறையைக் கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டிநிற்கிறது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
கனடியத் தமிழர் தேசிய அவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.