பக்கங்கள்

13 ஜனவரி 2011

ராஜபக்ஷே படத்துடன் நாட்காட்டி,தமிழர்களை அவமானப்படுத்தும் செயல்.

இந்திய அரசின் ராணுவத்துறை நடத்தும் சைனிக் பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ளது. இந்த பள்ளியில் 2011ம் ஆண்டுக்கான நாட்காட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நாட்காட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு தலைப்பாக "எல்லாமே சாத்தியம்" என்று எழுதப்பட்டுள்ளது.
இதை கண்டித்து பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த மனிதாபிமானமற்ற சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் படத்தை வெளியிட்டு எல்லாம் சாத்தியமே என்று இந்திய ராணுவத்துறையே தலைப்பு கொடுத்துள்ளது தமிழர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் செயல்.
தமிழர்களை கொன்றுகுவித்ததை அங்கீகரித்து பாராட்டி பெருமைப்பட்டுள்ளது இந்திய ராணுவம்.
ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டுள்ள சோக நிகழ்வுகளில் இருந்து மீளமுடியாமல் உலகத் தமிழர்கள் உள்ள நிலையில் ராஜபக்சேவின் படத்தை போட்டு தமிழ்நாட்டில் உள்ள பள்ளியில் கொடுத்து தமிழக மாணவர்களின் வீடுகளில் வைக்கச்சொல்லி கொடுப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இருக்கிறது.
தொடர்ந்து இது போன்ற செய்திகளால் தமிழ்நாட்டு மக்களிடம் ராஜபக்சேவுக்கு மரியாதை ஏஎற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் ராஜபக்சேவை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்று மத்திய அரசு முயல்கிறது.
இந்த அவமானத்துக்குரிய நாட்காட்டியை திரும்ப பெறவேண்டும். அப்படி இல்லையென்றால் நாட்காட்டிகளை பறித்து தீ வைத்து கொளுத்தும் போராட்டம் நடத்துவோம்," என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.