
முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட செம்மலை கிழக்கு நாயாறு கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கபட்ட நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தடாலடி போராட்டமொன்றை பூர்விக தமிழ் குடிகள் நடத்தியுள்ளன. இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் தமிழ் மக்களுடைய 20 ஏக்கர் விஸ்தீரணமான பூர்வீகநிலங்களை தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் படையினரது ஒத்துழைப்புடன் அபகரிக்க முற்பட்டுள்ளார். செம்மலை கிழக்கு நாயாறுப்பகுதியில் சிங்கள இனத்தவரான குணபால என்ற நபரே செம்மலையில் வசிக்கின்ற தமிழரான இராமலிங்கம் என்பவரிடம் கடற்கரை ஓரமாக சிறியதொரு நிலப்பரப்பினை காசுகொடுத்து கொள்வனவு செய்துள்ளார்.
அதன்பின்னர் குறித்த நபர் தான் கொள்வனவு செய்த சிறிய துண்டுக்காணியுடன் சேர்த்து அப்பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் சுமார் 20 ஏக்கர் விஸ்தீரணமான காணியைச்சுற்றி எல்லை வேலியடைக்கின்ற முயற்சியில் இறங்கியுளார். இக் காணி அபகரிப்பிற்கு அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் உதவியும் குறித்த நபருக்குக் கிடைத்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் வடமாகாணசபை அங்கத்தவரும் முல்லைதீவு மீனவ சங்க பிரமுகருமான து.ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து நேற்றைய தினம்; அப்பகுதியைப் பார்ப்பதற்காக பொதுமக்கள் சகிதம் சென்றிருந்த நிலையினில் குறித்த குடியேற்றவாசி அறிந்துகொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையினில் பிரதேச மக்கள் குறித்த நபரின் வேலி கட்டைகளைப் பிடுங்கி எறிந்து ஆவேசத்துடன் எறிந்துவிட்டு புதிய எல்லைகளை அமைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.