பக்கங்கள்

09 செப்டம்பர் 2010

பாக். தீவிரவாதிகளுக்கு கொழும்பில் பயிற்சி முகாம்.

பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொழும்பில் இராணுவ பயிற்சி முகாம் ஒன்றை நடத்தி வருகின்றார்கள் என்று பரபரப்புத் தகவல் ஒன்று கசிந்துள்ளது.
இந்தியாவின் மராட்டிய மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் தீவிரவாதி ஒருவர் அவரது வாக்குமூலத்தில் இவ்வதிரடித் தகவலை வழங்கி உள்ளார்.
மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பேக்கரி ஒன்றில் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதில் 17 பேர் உயிர் இழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர்.இது தொடர்பாக மராட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி குண்டு வைத்தவர்களைக் கண்டு பிடித்துள்ளார்கள்.
இவர்களில் ஒருவர் ஹிமாயத் பெய்க் . இவர் பாகிஸ்தானின் லஹ்கர் -இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர். இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு வந்து அங்குள்ள லஹ்கர்-இ-தொய்பா இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சிகள் பெற்றார் என பெய்க் இப்பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இலங்கையில் முகாம் அமைத்துச் செயற்படுகின்றார்கள் என்பது இப்போதுதான் முதல் தடவையாக வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொழும்புக்கு சுற்றுலா பயணிகள் போல செல்கின்றனர் என்றும் இரு வகையான இராணுவ பயிற்சிகளை இங்கு பெறுகின்றனர் என்றும் அவரும் அவ்வாறே பயிற்சிகளைப் பெற்றார் என்றும் பெய்க் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சி முகாம் பற்றிய தகவல்கள் இந்தியாவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஆயினும் கொழும்பில் எந்த இடத்தில் இப்பயிற்சி முகாம் உள்ளது? எத்தனை பேருக்கு அங்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன போன்ற விவரங்களை பெய்க் இன்னும் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.