பக்கங்கள்

01 செப்டம்பர் 2010

இந்தியா மீதான கோபம் யாழ். பொது நூலகத்தில் நடந்த கூட்டத்தில் வெளிப்பட்டுள்ளது.



நேற்று வடபகுதிக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளரை யாழ். பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனப் பிரதிநிதிகள் அனைவரும் சந்திக்கும் விதமாக யாழ். பொது நூலகத்தில் கூட்டம் ஒன்று நடந்தது. இக்கூட்டத்தில் இந்தியா மீது தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள அதிருப்தியும் கோபமும் வெளிப்படும் விதமாக பலரும் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். யுத்தத்திற்குப் பின்னராவது இந்தியா ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை எனக் குறிப்பிட்ட அவர் மேலும், இந்தியா, இந்திய-இலங்கை உடன்பாட்டை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா செயற்பட்ட விதம் குறித்து மக்கள் கடும் அதிருப்தியும் ஏமாற்றமும் கொண்டுள்ளனர். இந்தியா யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும், பொது மக்களைக் காப்பாற்றும் என்றே மக்கள் நினைத்தனர். எனினும் இந்தியா அதனைச் செய்யவில்லை. இந்தியா யுத்தத்தின் இறுதித் தருணங்களில் ஆயுதங்களை வழங்கியது. பொதுமக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்று தமிழ் மக்கள் இன்னமும் கருதுகின்றனர். யுத்தத்திற்குப் பின்னர் இந்தியா முக்கியத்தும் வாய்ந்த பங்களிப்புச் செய்யும், தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வொன்றை வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். ஒருவருடத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. நியாயபூர்வமான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதில் இந்தியா தோல்வியடைந்தது. இந்தியா வெறுமனே கண்களை மூடிக் கொண்டிருக்கிறது என்று பேராசிரியர் சிற்றம்பலம் தமது உரையைத் தொடர்ந்தார்.
இவற்றைக் கேட்ட நிருபமா தாம் தமிழர்களின் இந்த ஆதங்கங்களை இந்திய அரசுக்கு எடுத்துரைப்பதாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.