ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக பொறுப்பாளர் மங்கள சமரவீர எம்.பி. நேற்று செவ்வாய்க்கிழமை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தால் (சி.ஐ.டி.) விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சுவரொட்டி தொடர்பாக அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இடிஅமீனாக சித்திரிக்கும் வகையிலான சுவரொட்டிகளை பொலிஸார் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் அச்சகமொன்றின் 9 ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உகண்டாவின் முன்னாள் இராணுவ சர்வாதிகாரியான இடிஅமீன் மற்றும் ஜனாதிபதியின் சகோதரர்கள், புதல்வர்கள் ஆகியோரின் பிரதிமைகளைக் கொண்ட 6 உருவப்படத் தலைகளுடன் கடவுளொன்றை சித்திரிக்கும் சுவரொட்டிகளைப் பொலிஸார் கண்டுபிடித்திருந்தனர்.
சுவரொட்டிகளை அச்சிடுவதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனநாயக ரீதியில் தனது கருத்துகளைத் தெரிவிப்பதற்கான உரிமை தமக்கு இருப்பதாக தான் நம்புவதாகவும் சமரவீர கூறியிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து மிரிகான பொலிஸார் முன்னர் விசாரணை மேற்கொண்டிருந்தனர். நுகேகொட,தெல்கந்தவிலுள்ள அச்சகமொன்றில் இந்த சுவரொட்டிகளை அச்சிடுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக சமரவீர கூறியிருந்தார். இதேவேளை, அச்சகத்தின் உரிமையாளரால் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னை சட்டவிரோதமாக கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதாக அச்சக உரிமையாளர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
செப்டெம்பர் 09 இல் சமரவீர சில சுவரொட்டிகளை அச்சிடுமாறு தம்மை அணுகியதாகவும் 18 ஆவது திருத்த அமுலாக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகளை அச்சிடுமாறு தம்மை அணுகியதாகவும் அச்சிடுவதற்குரிய நிலைமையில் தான் இல்லையெனவும் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகளை அச்சிடும் வேலையை மற்றொரு அச்சகத்திற்குக் கொடுத்ததாகவும் அவர் கூறியிருந்ததாக சண்டேரைம்ஸ் பத்திரிகையின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.