இந்த வழக்கு விசாரணையைப் பார்வையிடுவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மன்றுக்கு வந்திருந்தனர்.
மனுவைத் தாக்கல் செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டார்.
தேர்தல் மனுவிலுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விளக்கமளிக்கப்படாது உள்ளதால், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு பிரதிவாதிகள் தரப்பு, அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்தது.
பிரதிவாதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு மனுதாரரான சரத் பொன்சேகா சார்பில் பதிலளித்த உபுல் ஜயசூரிய, ஏ.பி நைல்ஸ் ஆகிய சட்டத்தரணிகள், மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டுமெனக் குறிப்பிட்டனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்குகள் எண்ணும் நிலையங்களிலிருந்து மனுதாரரின் பிரதிநிதிகள் விரட்டப்பட்டமை, பதிவுசெய்யப்பட்ட வாக்குச் சீட்டுகள் பல்வேறு இடங்களில் கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் தேர்தல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்களை மனுதாரரால் தெரிவிக்க முடியாதெனவும் அந்தச் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான சாட்சியங்களை முன்னிலைப்படுத்த முடியுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இத்தகைய சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ள நிலையில் இதனைச் செய்தவர்கள் யாரென்பதை மனுதாரரால் கூறமுடியாமல் போனாலும் மனுவை நிராகரிக்கக் கூடாதெனச் சட்டத்தரணி ஜயசூரிய நீதிமன்றத்துக்கு விளக்கமளித்தார்.
தேர்தல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் மாத்திரமே தேர்தலின்போது இடம்பெற்ற சட்டவிரோதச் சம்பவங்கள் தொடர்பில் சாட்சியங்களை முன்னிலைப்படுத்தமுடியுமெனச் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சரத் பொன்சேகா ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட முனைந்தபோது அதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டது.
அவ்வேளையில் சரத் பொன்சேகா தடை ஏற்படுத்தியவர்களை நோக்கி நீங்கள் பாதுகாப்புக்காகவா அல்லது ஊடகங்களைத் தடுத்து நிறுத்தவா வந்துள்ளீர்களெனக் கோபமாகக் கேட்டார்.
“ஊடகங்களைத் தடுத்து நிறுத்தக் கழுதைகளை நியமித்துள்ளனர். இவர்களுக்கு முறையாக நடந்துகொள்ளத் தெரியாது. பாதுகாப்பெனக் கூறி ஊடகங்களைத் தடுக்க முயற்சிக்கின்றனர். இதையும் நீங்கள் ஊடகங்களில் தெரிவியுங்கள்” எனக் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.