எங்கள் உறவுகளை எங்களிடம் தாருங்கள்' என்று கண்ணீரும் கம்பலையுமாக நேற்றுக் கிளிநொச்சி, கரைச்சிப்பிரதேச சபை அலுவலகத்தில் நடைபெற்ற கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்த 350 இற்கும் மேற்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களில் பலர் கைது செய்யப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களையும், உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் கைகளில் ஏந்தியவாறு சாட்சியம் அளிக்க வந்திருந்தனர்.
மேற்படி பிரதேச மக்கள் சுதந்திரமாக சாட்சியமளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும், இதற்கென விசேட மொழிபெயர்ப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாகவும் அரச தரப்பு தெரிவித்தது. காணாமல் போனோர் தொடர்பாகவும், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பாகவும் மிகவும் உணர்வு பூர்வமாக கருத்துக்களைத் தெரிவித்த மக்களிடம் ஆணைக்குழு உறுப்பினர்கள் அவ்வப்போது குறுக்கு விசாரணைகளையும் நடத்தினர்.
அதேநேரம் சாட்சியமளித்த அனைவருமே காணாமல் போனோர், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதைச் செவிமடுத்த ஆணைக்குழுத் தலைவர், அவைகளை எழுத்து மூலமாகத் தரும்படி கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா, “காணாமல் போனோர், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பாக சி.ஐ.டி.யினரை அழைத்துப் பேசவுள்ளேன்” என்றார். இதற்காக ஆணைக்குழுவின் ஒருநாள் அமர்வுக்கு சி.ஐ.டி.யினர் அழைக்கப்படுவர் என்று கூறினார்.
மேலும், காணி, தண்ணீர்ப் பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துக்கூறிவர்களுக்கு, அந்த இடத்தில் அரசாங்க அதிபர், மற்றும் அதிகாரிகளை அழைத்து இப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு தெரிவித்தாராம்.
ஆணைக்குழு உறுப்பினர்கள், இரணமடுக்குளம், புலிகளின் விமானப்படைத்தளம் அமைந்திருந்த இடங்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.