பக்கங்கள்

21 செப்டம்பர் 2010

நல்லிணக்க ஆணைக்குழு என்பது ஒரு ஏமாற்று வித்தை - வன்னி மக்கள்.

வன்னியில் கடந்த மூன்று நாட்களாக நடந்த அரசின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நேற்று முல்லைத்தீவு அரச அதிபர் அலுவலகத்தில் நடந்தது. அங்கு சாட்சியம் சொல்ல வந்த கிட்டத்தட்ட 400 பேரில் 15 பேர் மட்டுமே சாட்சியம் அளிக்க அனுமதிக்கப்பட்டனர். மிகுதிப்பேர் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து தற்போது எதுவித தகவல்களையுமே அறியமுடியாதுள்ள தமது கணவன்மார், பிள்ளைகள் குறித்து புகார் அளிக்கவும் அவர்களைப் பற்றிய தகவல்களை வேண்டவும் என நேற்று ஏராளமான பெண்கள் கூடியிருந்தும் அவர்கள் தமது சாட்சியத்தை அளிக்க அனுமதிக்கப்படவே இல்லை.
கண்டாவளையில் சாட்சியம் அளித்த பெண்ணொருவர் கூறும்போது, இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களை இராணுவத்தினர் 16 பஸ்களில் ஏற்றிச் சென்றனர் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அதன்பின்னர் சரணடைந்தவர்கள் குறித்த தகவல் இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதே நிலைப்பாட்டையே நேற்றும் அநேகமான பெண்கள் தெரிவிக்க இருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இதையடுத்து அரசின் இந்த ஆணைக்குழு விசாரணை என்பது ஒரு கேலிக்கூத்தே என்றும் இதனால் தமிழ் மக்களாகிய எமக்கு எதுவித நியாயமும் கிடைக்கப்போவதில்லை என்றும் மக்கள் விசனப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் போரின் இறுதிக்கட்டச் சண்டை நடந்த இடமான முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் நேற்றையதினம் ஆணைக்குழு விஜயம் செய்துள்ளதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.