பக்கங்கள்

17 ஜூலை 2020

என் வெற்றியை விட சம்பந்தன்,சுமந்திரன் தோல்வி செய்தியே எனக்கு மகிழ்ச்சி என்கிறார் சிவாஜி!

நல்லாட்சி அரசாங்கத்தில் நிஜப் பிரதமராக இருந்த சுமந்திரன் நிழல் பிரதமராக இருந்த ரணிலை வைத்து எதனைச் சாதித்தார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். சாவகச்சேரி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “சில காலத்திற்கு முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வரும் போது அவரது நண்பர்கள் நிழல் பிரதமர் வருகிறார் எனக் கூறியிருந்தனராம். அதனைக் கேட்ட சுமந்திரன் “இல்லை, இல்லை நான் தான் நிஜப் பிரதமர், ரணில் விக்ரமசிங்கே தான் நிழல் பிரதமர்” எனப் பதில் கூறினாராம். இவ்வாறு நிழல் பிரதமரை வைத்து நிஜப் பிரதமராக இருந்து எதைச் சாதித்தீர்கள்? நூறு அரசியல் கைதிகளை விடுதலை செய்தீர்களா? மக்களின் காணிகளை விடுவித்தீர்களா?, போரினால் அழிந்து போன தேசத்தை மீளக் கட்டியெழுப்ப முயற்சி எடுத்தீர்களா? அண்மையில் இராணுவ ஆட்சி வரப்போகிறது என்று சுமந்திரன் புதிய நகைச்சுவை ஒன்றைக் கூறி இருந்தார். சுமந்திரனுக்கு இதுவரை 6 விசேட அதிரடிப்படை, 4 அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவினர். தற்போது மேலும் பத்துப் பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 மோட்டார் சைக்கிள் படையணி பாதுகாப்பு கொடுக்கிறது. பிறகு ஏன் சுமந்திரன் இராணுவ ஆட்சி பற்றி கவலைப்படுகிறார். அவர் வரும் போதே அந்த இடத்தில் மக்கள் கலங்குகிறார்கள். இம்முறை திருகோணமலையில் சம்பந்தன் ஐயா தோற்கடிக்கப்படக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. அவருக்கு அனுதாபம் காட்ட மக்கள் இம்முறை தயாரில்லை. இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய வெற்றிச் செய்தி கேட்டு நான் சந்தோசமடைவதனை விட சம்பந்தன் ஐயா மற்றும் சுமந்திரனின் தோல்விச் செய்தி கேட்டால் அதுவே எனக்கு வெற்றிச் செய்தியாக அமையும். தமிழினத்திற்கு ஓர் மாற்றம் ஏற்படும் என்றார் சிவாஜிலிங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.