இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் ஒரு பெரும் புத்தகத்தையே வெளியிட்டு விடலாம். அந்த அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியதைப் பலர் வரவேற்றுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடங்கு மாயினும், ஜெனிவாத் தீர்மான வெற்றியில் தங்களுக்கும் ஏதோ பங்கு இருப்பது போல கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பதானது, வெற்றியின் மகிழ்ச்சியை உள்ளார்ந்தமாக அனுபவிப்பதற்குத் தடை செய்ததென்றே கூற வேண்டும்.
உண்மையில் ஜெனிவாவில் தீர்மானம் நிறை வேறியதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எள்ளளவேனும் பங்கு கிடையாது. ஜெனிவாத் தீர்மானத்தை வரவேற்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நேர்மையும், நீதியும் இருக்குமாயின் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த ஜெனிவாத் தீர்மானம்- அந்தத் தீர்மானம் நிறைவேறுவதற்கு உதவியவர்களுக்கு பகிரங்கமாக நன்றி கூற வேண்டும். உண்மையில் இலங்கைக்கு எதிரான ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறுவதற்கும் ஈழத்தமிழர்கள் பட்ட துயரம் கண்டு உலகம் முழுவதும் கண்ணீர் விடவும் செய்த மகா புண்ணியம் சனல் 4ஐயே சாரும்.
‘இலங்கையின் கொலைக்களங்கள்- தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்’ என்ற ஆவணப்படத்தை சனல் 4 வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், வன்னியில் யுத்தம் நடந்ததா? என்று இந்த உலகம் கேட்டிருக்கும். எனவே சனல் 4 இற்கு ஈழத்தமிழ் இனம் தங்கள் சீவிய காலம்வரை நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள். இதற்கு மேலாக விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் இராஜதந்திர ரீதியில் உலக அறிஞர்களின் ஆலோசனையைப் பெற்று, நாடுகடந்த தமிழீழத்தை உடனடியாகவே ஆரம்பித்தார்கள். அவர்கள் எடுத்த அந்த அதிரடியான நடவடிக்கையும் ஜெனிவாத் தீர்மானத்திற்கு மூல காரணமாயிற்று.
இதைவிட எங்கள் பாசத்திற்குரிய சகோதரன் சீமானின் அர்ப்பணிப்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுக்கமான முடிபு என்பனவும் இந்தியாவை, இலங்கைக்கு பகையாக்கியது. ஆகவே, ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறுவதில் பங்களித்தவர்களுக்கு தமிழ் இனம் நன்றியுடையதாக இருக்க வேண்டும். இதைவிடுத்து ஜெனிவாவுக்குப் போகப் பயந்தவர்கள், ஜெனிவாத் தீர்மானத்தில் தங்களுக்கு உரிமை இருக்கிறது எனக் கூறினால் அதற்கு தமிழ் மக்களிடம் இருந்து மொழிவழிப் பதில் அன்றி வேறுவிதமாகவே அதற்கான பதில் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.