இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தலையிட்ட இராணுவத்தினர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் இணுவில் காரைக்கால் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
இணுவில் பகுதியில் உள்ள இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக முறுகல் நிலைமை காணப்பட்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இளைஞர் குழுவில் ஒரு பகுதியினர் தமக்கு உதவியாக அரியாலையில் இருந்து ஒரு குழுவினரைக் கொண்டுவந்து மோதலுக்கு தயாராகி உள்ளனர்.
இதன் காரணமாக இரு இளைஞர் குழுக்களும் பொல்லுகள் இரும்புக்கம்பிகள் கொண்டு மோதலுக்கு தயாராகிய நிலையில் இதனை அவதானித்த அந்தப் பகுதி மக்கள் அயலில் உள்ள இராணுவ முகாமிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, இராணுவத்தினர் மூன்று மோட்டார் சைக்கிள்களில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து இளைஞர்களிடையேயான மோதலைத் தவிர்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இளைஞர்கள் அதனை ஏற்க மறுத்ததுடன குறிப்பிட்ட இராணுவத்தினரை தாக்க முற்பட்டுள்ளார்கள். இதனால் கோபமுற்ற இராணுவத்தினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதனையடுத்து, இராணுவத்தினர் மூன்று இளைஞர்களைப் பிடித்து சுன்னாகம் காவற்றுறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த பல வருட இடைவெளியின் பின்னர் துப்பாக்கிச் சத்தம் கேட்டமையால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பெரும் பதட்டமான நிலமைக்கு உள்ளாகினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.