வலிகாமத்தின் சங்கானைப் பகுதியில் இன்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இந்து மத குருமார் மூவர் படுகாயமடைந்துள்ளனர். சங்கானை முருகமூர்த்தி ஆலய பிரதம குருவான நித்தியானந்த சர்மா என்பவரினது வீட்டினுள் புகுந்தே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
56 வயதுடைய நித்தியானந்த சர்மா அவருடைய மகன்களான 27 வயதான ஜெகானந்த சர்மா மற்றும் 32 வயதுடைய சிவானந்த சர்மா ஆகிய மூவருமே படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ஒரு தகவல் கூறுகின்றது. எனினும் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதற்கான பூரண விபரங்கள் வெளியாகவில்லை.
சம்பவத்தை அடுத்து வலிகாமத்தின் பல பகுதிகளும் படையினரின் சுற்றிவளைப்பிற்குள்ளாகியிருக்கின்றது. பிரதான வீதிகளில் பொதுமக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் பொதுமக்கள் வாகனங்களில் இறக்கப்பட்டு நீண்ட நேரம் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர் என எமது ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய முகாம் பகுதிகள் மற்றும் சந்திகளில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மோட்டார் சைக்கிளில் பயணித்த பலரும் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வன்னியிலிருந்து அண்மைக்காலங்களில் குடியமர்ந்த மக்கள் சோதனைச் சாவடியில் அவலத்திற்குள்ளாவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.