பக்கங்கள்

10 டிசம்பர் 2010

யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்!

இலங்கை யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச அளவிலான விசாரணை அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது :இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச அளவிலான விசாரணை அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பிரித்தானிய 'சனல் 4' தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பப்பட்ட 5 நிமிட காணொளியைக் கொண்டு சர்வதேச மட்டத்தில் ஒரு விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சென்ற வருடம் ஒளிபரப்பப்பட்ட காணொளியின் நீட்டிப்பு காணொளி என குறிப்பிட்ட காணொளி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அக் காணொளியில் உள்ள ஒரு பெண்ணின் உடல் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தொலைக்காட்சி சேவையில் செய்தி வாசிப்பாளரான இசைப்பியாவினுடையது என சர்வதேச தமிழ் ஊடகங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒளிபரப்பப்பட்ட காணொளி சித்திரிக்கப்பட்டவை என இலங்கை அரசு தெரிவிக்கிறது என ஏபி அறிக்கை வெளியிட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமை தினமான இன்று தமிழ் அரசியல் கைதிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகள் சர்வதேச மனித உரிமை தினமான இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தம்மை பிணையில் விடுவிக்க வேண்டும் அல்லது பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடைசிறைச்சாலை, வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை, புதிய மகசீன் சிறைச்சாலை, அநுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய சிறைச்சாலைகளில் உள்ள 800 அரசியல் கைதிகளே இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முன்னாள் எம்.பி.யும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்ட மைப்பின் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை துரிதப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இந்த விடயத்தில் நீதியமைச்சும், அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு காணாமல் போனவர்களை மீட்டுத் தருமாறு கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும் இன்று ஆர்ப்பாட்டம் இடம் பெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை காணாமல் போனோரை கண்டறிவதற்கான குழு ஏற்பாடு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.