பக்கங்கள்

16 டிசம்பர் 2010

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட குருக்கள் மரணம்!

யாழ் சங்கானை பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பூசகர்கள் மூவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சங்கானை இலுப்பைத்தாழ்வு முருகமூர்த்தி ஆலயப் பிரதமகுரு நித்தியானந்த குருக்கள் (வயது 55) நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் முகமூடி அணிந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் குருவின் வீட்டினுள் புகுந்து அவரையும் அவரது இரு மகன்மாரையும் சுட்டும் வெட்டியும் காயப்படுத்தியதோடு, மோட்டார் சைக்கிளையும் இரண்டு மோதிரங்களையும் கைச்சங்கிலியையும் பறித்துவிட்டுத் தப்பிச்சென்றனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மூவரும் யாழ். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையிலேயே நேற்று முருகமூர்த்தி ஆலயப் பிரதமகுரு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த பிரதம குருவின் மகன்மாரான சிவானந்தசர்மா(வயது 32), ஜெகானந்தசர்மா(வயது 26) ஆகியோர் தொடர்ந்தும் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூட்டு சம்பவத்திற்கு உதவிய துப்பாக்கி இராணுவத்தினருடையது என்பது தெரியவந்துள்ளது.
அதுபற்றி மேலும் தெரியவந்துள்ளதாவது,
சூடு நடத்தியவர்களுக்கு ரி56 துப்பாக்கிகளைக் கொடுத்து உதவிய படையினர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென ரல் ஹத்துருசிங்க பொலிஸாரிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
மானிப்பாயில் பணியாற்றும் கோப்ரல் ஒருவரே சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ரி56 துப்பாக்கிகளை சந்தேக நபர்களுக்கு வழங்கி உள்ளார். அவர் சிகரெட் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர். மற்றொரு சிப்பாயும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்' என்றார் ஜெனரல் ஹத்துருசிங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.