கடந்த வருடம் நடைபெற்ற போரில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளை நிர்வாணமாக்கிய பின்னர் சிறீலங்கா இராணுவத்தினர் அவர்களை சுட்டுக்கொல்லும் காணொளிக் கட்சிகளை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சனல் போஃர் செய்தி நிறுவனம் நேற்று (30) வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடந்த வருடம் சன்ல் போஃர் செய்தி நிறுவனம் வெளியிட்ட படுகொலை காணொளியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இழுத்துவரப்பட்ட தமிழ் இளைஞர்களை சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்யும் காட்சிகள் அடங்கியிருந்தன.
சிறிது நேரம் பதிவாகிய அந்த காணொளியில் 9 இளைஞகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த காணொளி உண்மையானது என ஐ.நாவின் முன்னாள் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான அதிகாரி பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் சுயாதீன விசாரணைகள் அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா பிரித்தானியாவுக்கு வருகைதந்துள்ள நிலையில் சனல் போஃர் செய்தி நிறுவனம் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் சரணடைந்த பெண் போராளிகள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கியுள்ளன. எனினும் அதன் கொடூரத்தன்மையை உணர்ந்த செய்தி நிறுவனம் அதனை முழுமையாக ஒளிபரப்பவில்லை. மேலும் சுட்டுக் கொல்லப்படும் முன்னர் பெண் போராளிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த காணொளி பதிவுகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் சனல் போஃர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நேற்று முன்தினம் (29) இரவு பிரித்தானியாவுக்கு வந்த மகிந்த ராஜபக்சா அங்கு திரண்ட தமிழ் மக்களை கண்டு அஞ்சி வேறு பாதையால் சென்றதாகவும், அவர் தற்போது டொன்கஸ்ரர் ஆடம்பரவிடுதியில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ள சனல் போஃர் செய்தியாளர், மகிந்தாவிற்கான பாதுகாப்புக்களை வழங்க பிரித்தானியா விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், பிரித்தானியாவிற்கு வந்துள்ள மகிந்தா போர்க்குற்றங்களில் தொடர்புள்ளவர் என அனைத்துலக மன்னிப்புச்சபை நேற்று (30) தெரிவித்துள்ளது. அவர் மீதான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அது பிரித்தானியா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.