நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
13 டிசம்பர் 2010
நவாலியில் பெரும்சத்தத்துடன் வான் நோக்கி பறந்தது நீர்!
வயலில் தேங்கியிருந்த மழை நீர் திடீரெனப் பெருஞ் சத்தத்துடன் வான் நோக்கி மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது. இதனைப் பார்த்த மக்கள் "சுனாமி” ஏற்பட்டு விட்டது என்று பதறி அடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தனர். நவாலி மேற்குப் பகுதியில் நேற்று நண்பகல் நேரம் இந்த அச்சமூட்டும் சம்பவம் இடம்பெற்றது.
இது மினிச் சூறாவளியாக இருக்கலாம் என வளிமண்டல வியல் அவதான நிலையப் பொறுப்பதிகாரி புஸ்பநாதன் தெரிவித்தார்.
நவாலி மேற்கு களையோடை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கும் (பிட்டி அம்மன்) ஆம்பன் குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த அச்சுறுத்தும் இயற்கைச் சீற்றம் இடம்பெற்றது.
இதுபற்றி தெரியவருவதாவது:
நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.50 மணியளவில், பெரும் உறிஞ்சு குழல் வைத்து உறிஞ்சுவது போன்ற போன்ற சத்தம் கேட்டது. வழக்கையாற்றுப் படுக்கைக்கு அருகில் இருந்த வயல் நிலங்களில் இருந்த நீர் திடீரென வான் நோக்கி மின்னல் வேகத்தில் சுழன்று பெருஞ் சுழலாக சீறிப் பாய்ந்தது. இதனால் வானத்துக்கும் நிலத்துக்கும் இடையில் கரும்புகை வடிவிலான ஒரு நூல் தொடுப்பு ஏற்பட்டது' என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
வானில் றொக்கெட் சென்றால் ஏற்படும் அடையாளம் போன்று அது இருந்தது' என்றும், சுமார் அரை மணி நேரம் இவ்வாறு தண்ணீர் வான் நோக்கி உறிஞ்சப்பட்டது எனவும் பிரதேசவாசிகள் கூறினர்.
சூறாவளி போன்று நீர் வான் நோக்கி இழுக்கப்பட்டதைக் கண்ட, வயல் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பதற்றமடைந்து ஓட்டம் எடுத்தனர். அப்பகுதி வீடுகளில் இருந்தவர்களும் பயத்தில் வீதிகளுக்கு விரைந்தனர். சுனாமி ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சத்தில் மக்கள் இடம்பெயர்வதற்கும் ஆயத்தமாகினர்.
எனினும் துணிச்சல் மிக்க இளைஞர்கள் சிலர் தண்ணீர் வான் நோக்கி இழுக்கப்படுவதை அருகில் சென்று தமது கமெரா மொபைல் போன்கள் மூலமாகப் பதிவு செய்தனர்.
விடயம் காட்டுத் தீ போலப் பரவியதில் சுனாமி அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், கல்லுண்டாய் பகுதியில் கடல் உள்வாங்கிக் கொண்டதாகவும் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. கொழும்பில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இது குறித்த விசாரிப்புக்களும் வந்தன.
இதற்கு முன்னர் ஒரு போதும் இவ்வாறான இயற்கைச் சீற்றங்கள் இப்பகுதியில் இடம்பெற்றதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த விநோத இயற்கைச் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் அவதான நிலையப் பொறுப்பதிகாரி புஸ்பநாதனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததாவது:
இவ்வாறான சம்பவம் சாதாரணமாகவே இடம்பெறக் கூடியது. இதனை மினி சூறாவளி என்று கூறலாம். கடலிலும் தரையிலும் இது ஏற்படலாம்.
வளிமண்டலத்திலுள்ள அமுக்க வேறுபாடு காரணமாக இவ்வாறான மினி சூறாவளிகள் ஏற்படுகின்றன. கடந்த இரு தினங்களாக அதிக வெப்பநிலை நிலவியது. அதனாலேயே இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம்.
சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான சூறாவளிகள் உயிர் மற்றும் உடைமைக்கும் சேதங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே மக்கள் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.