
யாழ்ப்பாணத்தில் படையினரின் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு அவர்களின் முகாம்களாகவும் காவலரண்களாகவும் இருந்து வந்த பல வீடுகள் உரிமையாளர்களிடம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீள ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
நாவற்குழி, கைதடி, நுணாவில் பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்கள் முற்றாக மூடப்பட்டதுடன் இப்பகுதிகளில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் சாவகச்சேரியில் அமைந்துள்ள பிரதான முகாமிற்கு மீளச்சென்றுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய முகாமாக இருந்து வந்த செம்மணி படை முகாங்களும் காவலரண்களும் அகற்றப்பட்டுள்ளன.
கடந்த 1995ம் ஆண்டு முதல் படையினரின் முகாம்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வீடுகளே பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.
வலி.வடக்கின் வலித்தூண்டல் பகுதியில் அமைந்திருக்கின்ற இரு படைமுகாம்களும் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை தெல்லிப்பழை அம்பன் பகுதியில் தனியார் வீடொன்றில் அமைந்திருந்த முகாமொன்றும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த வீட்டின் உரிமையாளர்கள் அங்கு சென்று குடியேறியுள்ளதுடன் வீட்டின் வேலிகளையும் அமைத்து வருகின்றனர்.
மாதகல் தபால் சந்திக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த இராணுவக் காவலரண்களும் நேற்று முதல் திடீரென அகற்றப்பட்டுள்ளன.
வடமராட்சி பிரதேசத்தில் மந்திகை மற்றும் மாலி சந்தியில் அமைந்திருந்த சிறிய முகாம்களும் நேற்று முன்தினம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வலிகாமம் கிழக்கின் நவகிரி, நிலாவரை பகுதிகளில் அமைந்திருந்த சிறுமுகாம்களும் அகற்றப்பட்டுள்ளன.
வலி. மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட வட்டு.கேணியடியில் அமைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டுள்ளன.
1995ம் ஆண்டு யாழ். குடாநாட்டினை இராணுவத்தினர் கைப்பற்றிய போது இந்தப் படைமுகாம்கள் அமைக்கப்பட்டன.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் குறித்த முகாம்களை அகற்றுமாறு வெளிநாட்டு இராஜதந்திரிகளும் உலகநாடுகள் பலவும் இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்தி வந்தபோதும் அகற்றப்படாமலிருந்த இந்த முகாம்கள் யாழ். மாவட்டத்திற்கான இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா பதவியேற்ற பின்னர் திடீர் திடீரென தற்போது அகற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.