பக்கங்கள்

18 ஆகஸ்ட் 2010

வே.பிரபாகரன் ஏன் போராட்டத்தைத் தொடங்கினார்? ஆணைக்குழு முன் முன்னாள் எம்.பி நீண்ட விளக்கம்.



"வடக்கு மாகாணத்தில் ஆரம்ப நாட்களில் இடம்பெற்ற தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் நடந்திருக்குமானால் இளைஞர்கள் வன்முறைப் பாதைக்கு சென்றிருக்க மாட்டார்கள்.
அமைதியான வழியில் போராடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிங்கள இனத்தை சேர்ந்த காடையர்களும், புத்த பிக்குகளும் சேர்ந்து கடுமையாகத் தாக்கினர்.
இவை போன்ற நிகழ்வுகளே வே.பிரபாகரனும்,தமிழ் இளைஞர்களும் கைகளில்ஆயுதம் ஏந்தக் காரணம் ஆகி விட்டன.” இப்படி தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று சாட்சியம் வழங்கினார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றியவருமான மங்கள முனசிங்க.
அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-
"தேச நலன் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசியல்வாதிகள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர்.இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழர்களின் வாக்குரிமைகளை ஐக்கிய தேசியக் கட்சி பறித்து விட்டது.
பண்டா- செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியினர் செயல்பட்டனர். இதுவே 1983 ஆம் ஆண்டின் ஜூலைக் கலவரத்துக்கு காரணம் ஆனது. அரசின் தற்போதைய பேச்சாளர் தேசத்தின் ஓட்டு மொத்த நலனையும் மனதில் நிறுத்தி மனப்பக்குவம் , முன்யோசனை , விவேகம் ஆகியவற்றுடன் கருத்துக்களை வெளியிட வேண்டும்.
கடந்த கால போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வரப்படாமைக்கு பரஸ்பர நம்பிக்கையின்மையே காரணம். இந்த போரை இனப் போராகவோ, தீவிரவாதத்துக்கு எதிரான போராகவோ கருத முடியாது.
இது முற்றுமுழுதான அரசியல் நோக்கம் கொண்ட போர் ஆகும். முன்பொரு காலத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையுடன் இணைந்தே வாழ்ந்தனர்,ஒன்றாகப் பணியாற்றினர். ஆனால் சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டின் தலைவர்கள் பொறாமையால் உந்தப்பட்டனர்.
தேச நலனை பற்றிய எண்ணம் எதுமின்றி அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற சிந்தனையோடு செயல்பட்டமையாலேயே பிரச்சினை ஏற்பட்டது.. இந்த எண்ணம் சிங்கள்-தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்தது. இன்னமும் இந்த நிலையே நீடித்துக் கொண்டிருக்கிறது.
தீவிரவாதம் காலப்போக்கில் ஏற்பட்ட ஒன்றுதான். இந்த நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களுமே பொறாமையுடனும், ஒருவர் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துகின்றமை ஒன்றையே குறிக்கோளாக கொண்டும் செயற்பட்டனர். அவர்களின் அரசியல் பக்குவம் குறைந்து போனது.
இதன் பின்னர் வடக்குப் பகுதியில் நடந்த தேர்தல்களில் இளைய சமுதாயம் சோர்வுடன் உற்சாகமின்றி காணப்பட்டது. இதன் விளைவாகவே அனைத்து அரசியல் கட்சிகளையும் , தீவிரவாதக் குழுக்களையும் அகற்றி விட்டு பிரபாகரன் களமிறங்கினார்.
வடக்கு பகுதியில் இடம்பெற்ற தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் நடந்திருக்குமானால் இளைஞர்கள் வன்முறைப் பாதைக்கு சென்றிருக்க மாட்டார்கள். ஆனால் அனைத்துமே தலைகீழாகி இருந்தன.
தேச நலனில் அக்கறையின்றி செயற்படுகின்றமையையும், ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற நினைப்பால் சண்டையிடுகின்றமையையும் அரசியல்வாதிகள் விட்டு விட வேண்டும். நாட்டு மக்களுக்காக ஒற்றுமையுடன் உழைக்க முன்வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.