பக்கங்கள்

13 ஆகஸ்ட் 2010

ஓரு தமிழருக்குத் தடுமன் ஏற்பட்டால் உலகத் தமிழருக்கு எல்லாம் தும்மல் வரவேண்டும் – பேராசிரியர் தீரன்.



நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு வருவது குறித்து சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் மூலம் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல் தமிழக தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட பகைமையைத் தீர்த்துக்கொள்வது போல் மீனவர் பிரச்சனையிலும் வெளிப்படையாக நடந்து கொண்டுள்ளனர். அரசுத் தரப்பில் உருப்படியாக எந்தப் பதிலும் கிடைக்காமல் ஒப்புக்கான விவதாமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினர் து.இராஜா குறிப்பிட்டது போல் எப்போது இலங்கை சம்மந்தமான விவாதம் நடந்தாலும் ஒரே மாதிரியான அறிக்கையை மத்திய அரசு தருகிறது எனச் சாடியுள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, விவாதத்திற்குப் பதிலளிக்கையில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் போகக்கூடாதென அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், மீனவர்கள் குறித்து ஒப்பந்தம் போட்ட பிறகு தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளது என்றும் இராஜபக்சே மன்மோகன் சிங்கிற்கு இனிமேல் தமிழக மீனவர்களைத் தாக்க மாட்டோம் என வாக்குறுதி தந்துள்ளார் என்றும், கச்சத்தீவைப் பொறுத்தவரை அது முடிந்து போன விவகாரம், திரும்பப் பெறுவது சாத்தியமற்றது எனவும் கூறி இந்திய அரசின் இயலாமையை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார். அமைச்சர் கிருஷ்ணாவின் பதில் இலங்கை அரசின் வெறிச் செயலை ஊக்கப்படுத்துவதாகவும், தமிழர் நெஞ்சங்களை ஊனப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
சிங்கள மீனவர் எல்லை தாண்டி வந்தாலும் சுடாமல் இந்தியக் கடற்படை அவர்களைப் பத்திரமாகக் கைது செய்து திருப்பியனுப்புகிறது. நமது நட்பு நாடு எனக் கூறிக் கொள்ளும் இலங்கை மட்டும் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை ஏன் அடித்தும் சுட்டும் கொன்று வருகிறது எனக் கேட்டால் இலங்கை என்ன தனது தூதரக உறவை முறித்துக் கொண்டு இந்தியாவுக்கு நெருக்கடியா தந்துவிடப் போகிறது? இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முடியாத மத்திய அரசுக்கு நமது வரிப்பணத்தில் ஒரு கப்பற்படை தேவையா? இவர்கள் இலங்கைக்கு நிதியுதவி, நெருக்கடியான நேரங்களில் இராணுவத் தளவாட உதவி, இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி உதவி போன்று முறைவாசல் வேலை செய்தாலும் செய்வார்களே தவிர, சுட்டுக்கொல்லப்படும் நமது தமிழக மீனவர்களைக் காப்பாற்றும் கடமையை மட்டும் செய்யமாட்டார்களாம்!
நாளுக்கு நாள் நடைப்பிணமாகி வரும் காங்கிரசைத் தூக்கிச் சுமக்க தமிழக அரசியல் கட்சிகள் பல போட்டிபோட்டுக் கொண்டு இருக்கும் போது, மத்தியில் ஆளும் காங்கிரசு தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதற்கு என்ன தடுப்பு நடவடிக்கைகள் உருப்படியாக இதுவரை எடுத்து இருக்கிறது என்று துணிச்சலாய் கேட்கும் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் இல்லாமலிருப்பது மாபெரும் மானக்கேடு ஆகும்.
கடலில் எல்லைக்கோடு பார்ப்பது கடினம். மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதோ சர்வசாதாரணம். ஆனால் சர்வதேசத்தில் எங்குமே எல்லை தாண்டினார்கள் என்பதற்காக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் கொடுமைகள் நடப்பது கிடையாது. அப்படியிருக்க இந்தியாவும் இலங்கையும் சார்க் நாடுகளின் உறுப்பு வகிக்கும் நாடுகளாக உள்ள போது, அங்குத் தமிழக மீனவர் பிரச்சினையை எழுப்பத் தயங்குவது ஏன்? தேசத்தின் மதிப்பு அதன் குடிமக்களைக் காப்பதில் இருக்குமா? அல்லது அண்டை நாடான இலங்கை நம் குடிமக்களை அழித்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் நமது தேசத்தின் மதிப்பு உயருமா?
கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்டு முடிந்த விவகாரம் அதைத் திரும்பவும் பரிசீலனை செய்ய முடியாது என்கிறார் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா. 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவின் அருகே மீன் பிடிக்கவும் வலைகளை உலர்த்தவும் புனித அந்தோணியார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு நடத்தவும் உரிமை வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்த உரிமை தற்போது நடைமுறையில் நமக்கு உள்ளதா? இல்லையா? இருந்தால், ஒப்பந்தப்படி இலங்கை நடக்காதபோது கச்சத்தீவை மீட்பது குறித்து எப்படி நம்மால் முடியாமல் போகும்? கச்சத்தீவில் நமக்கு உரிமை இல்லையென்றால், சீனர் கச்சத்தீவில் முகாம் அமைப்பதற்கும், உளவுப்பார்க்க தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கும் இலங்கை அனுமதித்திருப்பது மட்டும் ஒப்பந்தத்தை மீறிய செயல் அல்லவா? இந்தியப் பாதுகாப்பிற்கு இது ஆபத்தை விளைவிக்குமா, இல்லையா? இலங்கை நமக்கு எதிராகத் தந்திரமாகச் செயல்படும்போது நாம் மட்டும் உயிரிழப்புகளை தடுப்பதற்குக்கூட வாய்தா கேட்டுக் கொண்டிருக்கலாமா?
கச்சத்தீவு தமிழ்நாட்டின் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு உரிமை உடையதாக இருந்தது என்பது வரலாறு. கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல், கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது மத்திய அரசு தமிழர்களுக்கு செய்த பெருந்துரோகமாகும்.
தமிழக மக்களைக் கேட்காமல் நமக்கு உரிய கச்சத்தீவை இலங்கைக்குத் தந்துவிட்டு, இன்று தமிழக மீனவர்கள் மீது தவறிருப்பதுபோல், எல்லை தாண்டுவதால்தான் இலங்கை சுட்டுக் கொல்கிறது என்று முன்பு இந்திய தென்பிராந்தியக் கடற்படைத் தளபதியும், தற்போது வெளியுறவு அமைச்சரும் கூறுவது மிகவும் வேதனைக்கு உரியதாகும். மனித உயிர்களைவிட வெறும் காகித ஒப்பந்தங்கள் என்ன உயர்வானவையா? துணிவிருந்தால் கச்சத்தீவைக் கொடுத்தது சரியா, தவறா என தமிழகத்தில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தயாரா? சர்வதேச மீன்பிடி உரிமைகளை மீறி தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதைத் தடுக்க முடியாததற்குக் காரணம் ஒன்று இந்தியாவின் இயலாமையாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக மீனவர்களின் உயிர் உடமைகளை மிகவும் மலிவானதாக கருதும் மத்திய அரசின் மெத்தனப்போக்கு காரணமாய் இருக்க வேண்டும். நமது இந்திய அரசியல் சாசனப்படி பாரபட்சமின்றி இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்து பதவிக்கு வருகிறவர்கள் தனது குடிமக்களைப் பாதுகாக்க இயலாது என்பதை பகிங்கரமாக மாநிலங்களவையில் அறிவிக்கும்போது, உறுதிமொழியைக் காப்பாற்றத்தவறிய எஸ்.எம்.கிருஷ்ணாவின் பதவியைக் குடியரசுத் தலைவர் பறிக்க வேண்டும்.
இலங்கை அதிபர் இராஜபக்சே இந்திய பிரதமருக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம். எந்த வாக்குறுதிகளை இலங்கை இதுவரை காப்பாற்றி வந்துள்ளது? இலங்கையில் வடக்கு கிழக்கு மாநிலங்களை இணைக்கும் இநதிய-சிறிலங்கா ஒப்பந்தத்தை இதுவரை நிறைவேற்றினார்களா? ஒருதலைபட்சமாக இலங்கை உச்சநீதிமன்றத்தின் மூலமாக சர்வதேச உடன்பாட்டைக் குப்பையில் தூக்கி வீசினார்கள். பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தால், ஈழத்தமிழர்களைக் கொல்லமாட்டோமென இந்தியாவுக்கும் ஐ.நாவுக்கும் தந்த வாக்குறுதிகளை மீறி 2009 மே போரில் சுமார் 50,000 அப்பாவித் தமிழர்களைக் குண்டு வீசிக் கொன்ற இன்றைய ஹிட்லர்தானே அதிபர் இராஜபக்சே. வெள்ளைக் கொடியோடு சமாதானம் பேசவரும் போராளிகளைக் கொல்லமாட்டோமென வாக்குறுதி தந்துவிட்டு அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட தலைவர்களை ஈவிரக்கமில்லாமல் நொடிப்பொழுதில் சுட்டுக்கொன்ற இக்கால இடிஅமீன்தானே இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய இராஜபக்சே. பேர்ர் முடிவுற்ற பிறகு ஈழத்தமிழர்களின் புனரமைப்புப் பணிக்காக இந்தியா தந்த ரூபாய் 500 கோடியைச் சொன்னபடி அதற்காக செலவிட்டார்களா? அதைக்கூட பார்க்காமால் தற்போது வேறு 1000 கோடி ரூபாய் இந்தியா இலங்கைக்கு வழங்கியிருப்பது தமிழின அழிப்பிற்காக இந்தியா தரும் கௌரவ விருதுகளா? அல்லது சன்மானமா?
ஐ.நா.மன்றம் நியமனம் செய்துள்ள இலங்கையின் போர்க்குற்ற விசாரணை பற்றி ஆராய அமைக்கப்பட்ட மர்சுகி தரூஷ்மன் தலமையிலான குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அரசு அடாவடி செய்கிறது. இதைக்கூட இதுவரை இந்தியா தட்டிக்கேட்க முடியவில்லை. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மட்டும் இவர்கள் எங்கே தடுக்கப்போகிறார்கள்? அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா வாக்குறுதி தந்த 10ஆம் தேதியே, தமிழக மீனவர்களை இந்திய எல்லைக்குள்ளேயே வந்த இலங்கைக் கடற்படை, தனுஷ்கோடி அருகே கல்லால் அடித்து காயப்படுத்தி விரட்டியுள்ளது. இலங்கை கடற்படை பலமுறை நமது எல்லையில் வந்து தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மத்திய அரசு யார் வீட்டில் இழவு விழுந்தால் எங்களுக்கென்ன என்பதைப் போல் மெத்தனமாய் இருக்கிறது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சீக்கியர்களின் தலைமுடி காக்கும் டர்பனுக்காக பிரான்ஸ் அரசிடம் வாதாடி அவர்களுக்குப் பாதுகாப்பைப் பெற்றுக்கொடுத்தார். ஆனால் நூற்றுக்கணக்கான மீனவத் தமிழரின் உயிர்களை பாதுகாக்க மட்டும் இந்தியா தயங்குவது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தட்டிக் கேட்டால், அவரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கிறார்கள். தமிழர்களைக் கொல்பவனுக்குச் சன்மானம்: தடுக்கச் சொல்பவனுக்கோ சிறைவாசமாம்!
சாதிகளாய், சமயங்களாய், கட்சிகளாய்த் தமிழர்கள் கண்மூடித்தனமாக பிளவுற்று செயல்படுவதை விட்டுவிட்டு நாமனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு செயல்பட்டாக வேண்டும். இது மீனவர்களின் பிரச்சனை என்று பிற தமிழர்கள் ஒதுங்கி வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
சாதிகள், மதங்கள், கட்சிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும்தான் இருக்கின்றன. ஆனால் பிற மாநிலத்தவர், அவை எல்லாவற்றையும் கடந்து மலையாளி, தெலுங்கர், வங்காளி, காஷ்மீரி என்று இன உணர்வுக்கு முன்னுரிமை தந்து ஒன்றுபட்டு குரல் கொடுப்பதால் அவர்களுக்குப் பிரச்சனை ஏற்படுவது மிகமிகக் குறைவு. ஆனால் தமிழர்களிடம் இனஉணர்வுகளைவிட பிறஉணர்வுகள் மேலோங்கியிருப்பது ஒரு சாபக்கேடு!
ஆளும் கூட்டணியில் இருந்த போதிலும் மத்திய இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி மாவோயிஸ்டுகளுக்காக- ஆசாத் போன்ற அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த சமாதானத் தூதுவர்களாக இருக்கக்கூடியவர்களை மத்திய அரசு சுட்டுக்கொன்றது தவறு என்றும் அதற்காக நீதிவிசாரணையையும் துணிவுடன் கோரியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக மம்தா அப்படி பேசியிருந்தாலும் அவரிடம் மேலோங்கியிருப்பது, தான் ஒரு வங்காளி என்ற உணர்வுதான். ஆனால் தமிழ்நாட்டிலோ ஊழல் தலைவர்களிடம் அதிகாரம் உள்ளது, உணர்வுள்ள தமிழர்களுக்கோ சிறைவாசம் என்ற நிலைதான் உள்ளது.
அரசியல் ஆதாயத்திற்காகக் கூட, இங்கே அப்பாவித் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்பட, சுயநலத் தேர்தல் அரசியலையும் தாண்டி செயல்படுவதற்குத் தமிழகத்தில் யாரும் தயாராக இல்லை. தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஈழத்தமிழர்கள் அங்கே முள்ளிவாய்க்கால் போரில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். கேட்க நாதியில்லை. தடுக்க யாருமில்லை. தமிழன் என்கிற அதே காரணத்திற்காக இந்தியாவிலும் வந்து சிங்களக் கடற்படை எம் மீனவத் தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்களைப் படுகொலை செய்து வருகிறது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள மீனவர்களின் உடமைகளைச் சூறையாடிக் களிக்கிறது. கேட்க நாதியில்லை. தடுக்க யாருமில்லை. பறவை, விலங்குகளைவிட தமிழனின் உயிர் மிகமிக மலிவாகப் போய்விட்டது இன்று.
ஊரடங்கு உத்தரவு போடுமளவிற்கு வீதிக்கு வந்து போராடியதால் காஷ்மீரிகள் விருப்பப்படி இன்றைக்குச் சுயாட்சி தந்தேனும் அவர்களைத் திருப்திப்படுத்தப் பார்க்கிறது இந்திய அரசு. தேர்தல் மூலமும், போராட்டம் மூலமும் காங்கிரசுக்குச் சரியான பாடம் புகட்டியதால், தெலுங்கானா தனி மாநிலம் தரவும் முன்வந்துள்ளது மத்திய அரசு. ஒருவேளை புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் பாடியதுபோல், “இனமல்லடா, அவன் பகைவன், இனியும் ஏமாற வேண்டாம் தமிழா! மனமொன்று செயலொன்று அன்னோர்க்கு, கெட்ட வஞ்சகரைக் கண்ட இடமெல்லாம் தாக்கு!” என்று தமிழர் கூட்டம் வெகுண்டு எழுந்தால்தான் அங்கு ஈழத்தமிழர்க்கு மட்டுமல்ல, இங்குள்ள தமிழர்க்கும் பாதுகாப்பு உறுதியாய் கிடைக்கும். கன்னியாகுமரியில் ஒருவர்க்குத் தேள் கொட்டினால், காஷ்மீரில் இருப்பவர்க்கு நெரி கட்டுகிறது என்பார்களே, அதுபோல இங்கு ஒரு தமிழனுக்குத் தடுமன்(சலதோசம்) ஏற்பட்டால், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு உடனே தும்மல் வரவேண்டும். அன்றுதான் தமிழினத்திற்கு விடியல் பிறக்கும் நாள்!
—-
பேராசிரியர் தீரன்மாநில ஒருங்கிணைப்பாளர்,

நாம் தமிழர் கட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.