ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (30.08.2010) 3வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் (28.08.2010) ஜெனீவாவிலிருந்து Nyon வரை 23km தூரம் வந்தடைந்த இவர்கள் நேற்று (29.08.2010) தொடர்ந்து Rolle, Morges ஆகிய பிரதேசங்கள் ஊடாக 42km தூரம் நடந்து Lausanne-Renens பிரதேசத்தை சென்றடைந்தனர். இன்று (30.08.2010) இங்கிருந்து நடைபயணம் தொடரும்.
இவர்கள் செல்லும் பிரதேசங்களில் பல இடங்களில் தமிழ் மக்கள் உற்சாகமளித்து சிற்றுண்டிகளையும் பானங்களையும் வழங்கி ஆதரவளித்ததுடன் பலர் இணைந்து நடந்தும் சென்றனர்.
•இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
•எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
•மனித உரிமைகள் மதிக்கப்படு;ம் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனிதநேயன் சிவந்தன் கடந்த ஜூலை 23ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து மனிதநேய நடைபயணமொன்றை ஆரம்பித்து இம்மாதம் 20ஆம் திகதி தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜெனி வாவிலுள்ள ஐ. நா. சபையிடம் கையளித்தார். அதன் தொடர்ச்சியாக ஒருவார இடைவெளியின் பின் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி மூன்று ஈழ உணர்வாளர்களின் அடுத்தகட்ட மனிதநேய நடை பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.