பக்கங்கள்

09 ஆகஸ்ட் 2010

புகலிடம் கோரி வரும் ஈழத் தமிழர்களை குற்றவாளிகள் போல் நடத்தவே கூடாது!



வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்காக எம்.சி.சன்.சி கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை யுத்தக் குற்றவாளிகளைப் போல் நடத்தக் கூடாது என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரி உள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் அமெரிக்கக் கிளையைச் சேர்ந்த உயரதிகாரியும்,இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களில் மிகவும் கை தேர்ந்த நிபுணருமான ஜேம்ஸ் மக்டொனால்ட் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் உயரதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி த வொஷிங்டன் போஸ்ட் கடந்த 04 ஆம் திகதி செய்தி ஒன்றை பிரசுரித்திருந்தது. இந்த கப்பல் வட அமெரிக்கா நோக்கி வருகின்றது என்றும் அவ்வாறு வந்தால் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்திருந்தார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பத்திரிகைக்கு ஜெம்ஸ் மக்டொனால்ட் எழுதி அனுப்பிய குறிப்பு ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:
”இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றமை இந்தத் தமிழர்களுக்குப் பேராபத்துக்களை ஏற்படுத்தி விடும்.எனவே அமெரிக்காவின் நிலைப்பாடு ஏற்க முடியாதது ஆகும். கடந்த கால யுத்தத்தின்போது அரசு-புலிகள் இரு தரப்பினருமே யுத்தக் குற்றங்களைப் புரிந்துதான் இருக்கின்றார்கள். இந்த யுத்தக் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாதுதான்.
ஆனால் தமிழர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர்.அத்துடன் புலிகள் இயக்கத்தில் கட்டாயப்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் இந்த தமிழர்களுக்கு தீங்குகள் நேர்ந்து விடும்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் புலிகள் இயக்கத்தினர் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாமல் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.தடுப்புக் காவலில் சித்திரவதை செய்யப்பட்டும் வருகின்றார்கள்-சிலர் இறந்தும் இருக்கின்றார்கள்.
அரசியல் தஞ்சம் தேடி வருபவர்கள் எந்த நாடுகளுக்குச் செல்கின்றார்களோ அங்கு அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகவும், நீதியாகவும் செவிமடுக்கப்படுதல் வேண்டும்.
இது அவர்களின் உரிமையாகும். எனவே இந்தத் தமிழர்களை யுத்தக் குற்றவாளிகள் போல் நடத்த வேண்டாம்.இவ்வாறு செவிமடுக்காமல் அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புகின்றமை அநீதி ஆகும்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.