
வட மாகாண பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப்பணிகள் மகிழ்ச்சி அளித்தாலும் அதனை மதிப்பீடு செய்வதற்காக நான் இலங்கை வரவில்லை.
உள்நாட்டில் மனித உரிமைகளின் தற்போதைய நிலைவரத்தை மதிப்பீடு செய்வதே இலங்கைக்கான எனது பயணத்தின் நோக்கமும் கடமையும் ஆகும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.நூலகத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (27.08.13) காலை சென்ற ஆணையாளர் நவநீதம்பிள்ளை நூலகத்தை பார்வையிட்டதுடன் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் பிரதி செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் ஆகியோரின்
தலைமையில் வட மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் வடக்கில் மேற் கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பில் நவநீதம்பிள்ளைக்கு விளக்கமளித்தார்கள்.
இதன் போது உரையாற்றுகையிலேயே மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். தொடர்ந்தும் அங்கு உரைஆற்றிய அவர்
இலங்கையின் வடபகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளமையை உங்களின் விளக்கமளிப்புகளூடாக அறிந்து கொள்கின்றேன். குறிப்பாக ஐ.நா. இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களையும் ஐ. நா. கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.
மீள் குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளும் மகிழ்ச்சியளிக்கின்றது.
எனினும் “இலங்கைக்கான எனது பயணத்தின் நோக்கம் வடக்கின் அபிவிருத்திகளை மதிப்பீடு செய்வதில்லை. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை முழுமையாக மதிப்பீடு செய்வதும் குறிப்பிட்ட சில தரப்புக்களையும் பொது மக்களையும் சந்தித்து உண்மை நிலைவரத்தை கண்டறிய வேண்டியதும் எனது கடமையாகும்” எனக் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.