பொறளை கனத்தை மயானத்தில் மர்மமான முறையில் பிணத்தை எரிக்கும் பணிகள் நேற்று அதிகாலை 1 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது -
வழக்கத்தில் கனத்தை மயானத்தில் மாலை 7 மணிக்குப் பின்னர் சடலங்களை எரிக்கும் பணிகள் இடம்பெறுவதில்லை.
நேற்று அதிகாலை சடலம் எரிக்கும் பணி இடம்பெற்றபோது மயானப் பகுதியில் இரண்டு ஜீப் வண்டிகளும், வெள்ளைவான்களும் நின்றதாக அயலில் உள்ள ஒருவர் பொறளை காவல்துறையிடம் முறையிட்டுள்ளார். இதுபற்றித் தாம் 1.40 மணியளவில் பொறளை காவல்துறையிடம் முறையிட்டதாகவும், ஆனால், அந்த ஜீப்கள் மற்றும் வெள்ளைவான்கள் அகன்று செல்லும் வரை சிறிலங்கா காவல்துறையினர் அங்கு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கனத்தையில் காணப்பட்டவர்கள் சாதாரண உடை அணிந்திருந்ததாகவும், ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் சிறிலங்காப் படையினரைப் போன்று காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொறளை காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த முறைப்பாடு கிடைத்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் மேற்பார்வையில் இயங்கும் கனத்தை மயானம், இரவு 7 மணிக்குப் பின்னர் இயங்குவதில்லை என்றும், அதன்பின்னர் மயானத்தின் சாவி பிரதம பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கொழும்பு மாநகரசபை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் கனத்தையில் நேற்று அதிகாலை சடலம் எரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது பற்றி எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
1988,89 காலப்பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜேவிபி தலைவர் றோகண விஜேவீர உள்ளிட்ட ஏராளமானோரின் சடலங்கள் நள்ளிரவு நேரங்களில் இரகசியமாக கனத்தை மயானத்தில் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.