பக்கங்கள்

09 மார்ச் 2021

பிரபாகரனின் தம்பி நான்,சமரசத்திற்கு இடமில்லை,சீமான் அதிரடிப்பேச்சு!

இலவசங்களையும் கவர்ச்சித் திட்டங்களையும் அறிவிக்கப் போவதில்லை. மக்களுக்கு இலவசங்களே தேவைப்படாத அளவிற்கு வாழ்க்கைத்தரத்தை மாற்றுவோம் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். திருவொற்றியூர் தொகுதியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கிய சீமான், ஓடி ஆடி வேலை செய்யக்கூடிய தெம்பு இருக்கும் போதே அதிகாரத்தை கொடுங்கள் சிறப்பான ஆட்சியை தருகிறோம் என்று கூறி வாக்கு சேகரித்தார். சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி. ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து விட்டு பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார் சீமான்.சென்னை திருவொற்றியூரில் களம் காண்கிறார் சீமான். விவசாயி சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்த சீமான், முதல் பிரச்சாரத்திலேயே அதிரடியான வாக்குறுதிகளை அளித்தார். மிக்சி தருகிறேன், டிவி தருகிறேன் என்று இலவசங்களை கவர்ச்சி திட்டங்களை அறிவிக்க மாட்டேன் என்று கூறினார்.உங்களை நம்பி இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான இலவசக் கல்வியை அளிப்போம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் வகையில் உத்தரவாதத்தை கொடுப்போம் என்றார்.இலவசங்களை மக்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அவர்களின் வாழ்வை உயர்த்த முயற்சி செய்வோம். தண்ணீர் விற்பனைக்கு தடை செய்வோம். தரமான மருத்துவம் ,கல்வி ,கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பினை அளிப்போம் என்றார், அனல்மின் நிலையத்தை உருவாக்கி வாழும் இடத்தை அழித்து சாம்பலாக்கி கொண்டிருக்கிறார்கள். காட்டுப்பள்ளியில் 6000 ஏக்கர் இடத்தை அதானி வாங்கி மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்துள்ளார். பிரபாகரனின் தம்பி நான்; எதற்கும் சமரசம் செய்யாமல் சண்டை போடும் துணிவு கொண்டவன்.உடம்பில் ஆடி ஓடி வேலை செய்ய தெம்பு இருக்கும் போதே கொண்டு போய் அதிகாரத்தில் அமர வைத்து விடுங்கள் நாங்கள் சிறப்பான ஆட்சியை உங்களுக்குக் கொடுக்கிறோம். சக்கர நாற்காலியில் அமர்ந்த பிறகு பதவி கொடுத்தால் வேலை செய்ய முடியாது எனவே இப்போதே ஜெயிக்க வைத்து விடுங்கள் என்று வாக்கு சேகரித்தார் சீமான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.