பக்கங்கள்

12 மார்ச் 2021

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரது கூடாரத்தை அகற்றியது பொலிஸ்!

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பு – மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடைபெறுகின்ற நிலையில், இன்று அதிகாலை போராட்டம் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரமும், பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொலிஸாரினால் இந்த அகற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், கறுப்புக் குடைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டததை முன்னெடுத்தனர். இதேவேளை, கூடாரம் மற்றும் பதாகைகள் அகற்றப்படடமை தொடர்பாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்வதற்குச் சென்றவேளை, கூடாரம் உள்ளிட்டவற்றை தாமே அகற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாகவே குறித்த கூடாரம் உள்ளிட்டவை அகற்றப்பட்டதாக, குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார். எனினும், நீதிமன்றக் கட்டளை தொடர்பாக எந்தவித அறிவிப்புகளும் தமக்கு வழங்கப்படாமல், எவ்வித முன்னறிவித்தலும் வழங்கப்படாமல் தன்னிச்சையாக இந்தச் செயற்பாடு இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இது சட்ட விரோதமான செயலென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவுசெய்துள்ளதாக அருட்தந்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில், சாத்வீக ரீதியான, அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் நீதி கோரிய போராட்டம் அனைத்துத் தடைகளையும் தாண்டி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவிக்கையில், நாங்கள் போராட்டம் நடத்தும் கூடாரங்களை அகற்றிச் சென்றமையானது இந்த நாட்டில் நீதி செத்துவிட்டது என்பதையும் அநீதி தலைவிரித்தாடுவதையும் காட்டுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.