
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கலந்துகொள்ளவில்லை.ஈ.பி.ஆர்.எல்.எப் வடமாகாண உறுப்பினர்கள் மூன்று பேரும் இன்று புதன்கிழமை வவுனியாவில், சட்டத்தரணி க.தயாபரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
மன்னார் மாவட்ட உறுப்பினர் மயில்வாகனம் தியாகராஜா, முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், யாழ்.மாவட்ட உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோரே சத்தியப்பிரமாணம் மேற்கொண்டனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன் வவுனியாவில் தங்கியிருந்தபோதும், வவுனியாவில் நடைபெற்ற தனது கட்சி அஙகத்தவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்விற்குச் செல்லவில்லை என்று தெரியவருகிறது.
இருந்தும் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வட மாகாணசபைக்கு இதே கட்சியின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட வவுனியாவை சேர்ந்த ஐ. இந்திரராஜா இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லை.
தான் வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளமையினால் இன்றைய சத்தியப்பிரமாண நிகழ்வை புறக்கணித்ததாகவும் ஈபிஆர்எல்எப் கட்சியினருக்கும் தனக்கும் தனிப்பட்ட ரீதியில் முரண்பாடுகள் கிடையாது என்றும் அவர் தெரிவித்திருப்பதாக தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.