
குழறுபடிகள் மற்றும் புறக்கணிப்புகளின் மத்தியில் வட மாகாணசபை அங்கத்தவர்களுள் ஒருபகுதியினர் இன்று தமது பதவியேற்புகளை செய்துகொண்டுள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையில் அவர்கள் தமது சத்தியப் பிரமாணத்தினை செய்து கொண்டனர்.
எனினும் ஈபிஆர்எல்எவ்வின் ஜந்து உறுப்பினர்களும் புளொட் அமைப்பின் இரு உறுப்பினர்களும் டெலோவின் உறுப்பினரான சிவாஜிலிங்கமும் மற்றும் குணசீலனும் பதவியேற்பை புறக்கணித்து விட்டனர்.
முன்னதாக யாழ்.நகரிலுள்ள தந்தை செல்வா நினைவு தூபிப்பகுதியில் மலரஞ்சலி செலுத்திய பின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் பங்கெடுத்தனர்.
முன்னதாக மேடை முன்பதாக அனைத்து உறுப்பினர்களும் சத்தியப் பிரமாணத்தினை செய்த பின்னர் ஆவணங்களில் ஒப்பமிடும் நிகழ்வினை கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முன் செய்து கொண்டனர். பின்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஆவணத்தினை முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.
மாவீரர்களிற்கான அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமாகியிருந்ததுடன் உறுப்பினர்கள் அமைச்சர்கள் எவரும் மாலை மரியாதைகளை ஏற்க மறுத்ததை காணக்கூடியதாக இருந்தது. பதவியேற்பு நிகழ்வில் கூட்டமைப்பில் கூடிய வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டிருந்த பெண் வேட்பாளர் அனந்தியும் கலந்து கொண்டிருந்தார்.
கட்சி தலைவர்களான சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் சித்தார்த்தன் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் நிகழ்வை புறக்கணித்திருந்தனர். டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சமூகமளித்திருந்ததுடன் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விந்தனும் பிரசன்னமாகி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார். ஈபிஆர்எல்எவ் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஐங்கரநேசன் சமூகமளித்திருந்த போதும் அவர் மகிழ்சிகரமாக இருந்திருக்கவில்லை.
பெரும்பாலும் ஒரு நீடித்த மௌனம் பதவியேற்பில் காணப்பட்டது. கோலாக கொண்டாட்டங்கள் ஏதுமின்றி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. வடமாகாணசபையினது அமைச்சு செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பெருமளவினில் நிறைந்திருந்தனர்.சம்பந்தன்,விக்கி, சுமந்திரன் ஆகியோரின் செயற்பாடுகளால் அதிருப்தியுற்றுள்ள வடக்கு மக்கள் இப்பதவியேற்பு நிகழ்வுகள் தொடர்பில் ஆர்வம் காட்டவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.