நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
15 செப்டம்பர் 2021
அரசியல் கைதிகளை மிரட்டிய அமைச்சர்,கஜேந்திரகுமார் கண்டனம்!
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் கைதிகள் இருவரை முழந்தாளிடச் செய்துள்ளதுடன் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 12ம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை முழந்தாளில் இருக்க செய்துள்ளார்.
பின்னர் அவர் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை சுட்டுக்கொல்லப் போவதாக மிரட்டியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இதனை உறுதிப்படுத்த முடியும், இராஜாங்க அமைச்சரின் கொடுரமான நடவடிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக கண்டிக்கின்றது.
உலகின் மிகவும் பயங்கரமான சட்டங்களில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அவர்கள் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,சிலர் ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக அவர்களிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நலன்களை கவனிக்க வேண்டிய அமைச்சர் அவர்களை கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளமை அவர்களது நிலையை மேலும் மோசமாக்கியிருக்கும்.
குறிப்பிட்ட அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டும் அவரது பொறுப்புகளை பறிக்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது.
ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இலங்கையின் ஒரு அமைச்சர் இது போன்ற மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதென்பது, ஐநா மனித உரிமை பேரவையை இலங்கை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதையே எடுத்துக்காட்டுவதாகவும் பதிவிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையை ஒரு பொருட்டாகக் கருதாத இலங்கையை தொடர்ந்தும் ஐநா மனித உரிமைப் பேரவைக்குள் வைத்திருப்பது அர்த்தமற்றது எனவும், அதற்கு அப்பால் குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.