நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
07 நவம்பர் 2020
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி!
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட திரு. ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கியப் போட்டிக்களமாகத் திகழ்ந்த பென்சில்வேனியா மாநிலத்தைக் கைப்பற்றியதன்மூலம், அவருக்கு அந்த வெற்றி சாத்தியமானது.
வெள்ளை மாளிகையைக் கைப்பற்றத் தேவையான அதிபர் மன்ற வாக்குகள் 270-ஐப் பெற, அந்த வெற்றி அவருக்கு வழிவகுத்தது.
இந்த வெற்றியின்மூலம், 'அமெரிக்க அதிபராகத் தெரிவுபெற்ற ஆக வயதானவர்' என்ற பெருமை, திரு. பைடனைச் சாரும்
அதேவேளையில், அமெரிக்காவின் 'முதலாவது பெண் துணையதிபர்' என்னும் பெருமையை அவரோடு இணைந்து போட்டியிட்ட திருவாட்டி கமலா ஹேரிஸ் பெறுகிறார்.
இந்தியத் தாய்க்கும் ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்த கலப்பினத்தவர் திருவாட்டி கமலா ஹேரிஸ்.
இருப்பினும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த திரு. டோனல்ட் டிரம்ப்பின் பிரசார இயக்கம், தனது வேட்பாளர், தோல்வியை ஒப்புக்கொள்ளத் திட்டமிடவில்லை எனக் கோடிகாட்டியுள்ளது.
1990களுக்குப் பிறகு, ஒரே ஒருமுறை மட்டும் பதவியில் இருந்த முதலாவது அதிபர் என்ற நிலையை, அண்மை முடிவு திரு. டிரம்ப்புக்கு ஏற்படுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கையை ஏற்கெனவே முடித்துவிட்ட மாநிலங்களில் இருந்து பெற்ற அதிகாரபூர்வமற்ற முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு, BBC நிறுவனம் அண்மைத் தகவலை வெளியிட்டது.
விஸ்கோன்ஸின் உள்ளிட்ட மாநிலங்களில், இன்னமும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கடந்த சுமார் நூறாண்டுகளில், ஆக அதிகமானோர் வாக்களித்த அதிபர் தேர்தல் இதுதான். இதுவரை, திரு. பைடன், 73 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில், இதுவரை வேறு எந்த வேட்பாளரும் இவ்வளவு வாக்குளைப் பெற்றதில்லை.
திரு. டிரம்ப், 70 மில்லியன் வாக்குகளைப் பெற்று அதற்கு அடுத்த நிலையில் உள்ளார்.
வாக்குகள் எண்ணி முடிக்காதநிலையில் திரு. டிரம்ப், தாமே தேர்தலின் வெற்றியாளர் எனத் தமக்குத் தாமே அறிவித்துக்கொண்டார்.
பின்னர் அவர், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இருப்பினும், மோசடிக்கான ஆதாரங்கள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை.
வாக்கு எண்ணிக்கை தொடங்கி முதலில் வெளியான முடிவுகளின்படி, அமெரிக்க வாக்காளர்கள், கிருமிப்பரவலைக் காட்டிலும் பொருளியலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதுபோல் தோன்றுவதாக கவனிப்பாளர்கள் கூறியிருந்தனர்.
ஆனால், அஞ்சல் வாக்குகள் எண்ணத் தொடங்கி ஜனநாயகக் கட்சிக்கான வாக்குகள் அதிகரிக்கத் தொடங்கியதும், கிருமிப்பரவலே இந்தத் தேர்தல் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது என்பது தெரியவந்தது.
திரு. டிரம்ப் கிருமிப்பரவலைக் கையாண்டவிதம் திருப்திகரமாக இல்லை என்பதை முன்வைத்தே, ஜனநாயகக் கட்சி தனது பிரசாரத்தை நடத்திவந்தது.
ஆனால், கிருமிப்பரவல் ஓர் அரசியல் உத்தி என்றுகூறிவந்த திரு. டிரம்ப், வாக்களிப்பு நாளுக்குப்பிறகு அது தணியத் தொடங்குமென்று கூறிவந்தார்.
உண்மையில், கடந்த மூன்று நாள்களாக அமெரிக்காவில், முன்னெப்போதும் இல்லாத அளவில் நூறாயிரத்துக்கு மேற்பட்ட புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
ஆகக் கடைசி நிலவரப்படி, அமெரிக்காவின் ஒருநாள் கிருமித்தொற்று எண்ணிக்கை, 132, 700 ஆக இருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.