பக்கங்கள்

29 ஆகஸ்ட் 2020

இனப்பிரச்சனைக்கு சரியான மருந்து சமஷ்டி என்கிறார் விக்கினேஸ்வரன்!

அமைச்சர் உதய கம்மன்பில வரலாற்றைப் படித்து விட்டு தன்னோடு விவாதத்துக்கு வர வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இடைக்கால கணக்கு அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “எனது நண்பர் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு கூறுவது என்னவென்றால் அவரின் வரலாற்று குறிப்புகள் காலங்கடந்தவை. அவர் வரலாற்றை படித்துவிட்டு வரவேண்டும். நான் பிரிவினைவாதத்தை கேட்கவில்லை பல்வகைத்தன்மையில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றே கூறுகிறேன். நாட்டின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே சரியான மருந்து . எனது உரை தொடர்பில் நேர்மையாகவும், தொழில்முறையாகவும் நடந்துக்கொண்ட நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன். அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இடைக்கால கணக்கு அறிக்கை தொடர்பில் நான் எதனையும் கூறப்போவதில்லை. எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மக்களை துயரத்திலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. பொருளாதார உதவிகள் வழங்கப்படவில்லை. முதலமைச்சருக்கான நிதி கூட மறுக்கப்பட்டது. அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எங்களது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் கிடைத்திருக்கிறது. நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே பொன்னான தருனம். யுத்தத்தை வெல்வது இலகு. ஆனால் சமாதானத்தை வெல்வது கடினமானது. சமாதானமே உண்மையான வெற்றி. “ஒருமித்த” நாட்டுக்குப் பதிலாக “ஐக்கிய” நாட்டை கட்டியெழுப்புவதன் மூலம், 10 ட்ரில்லியன் சர்வதேச கடன் இருக்கின்றபோதிலுங் கூட, இந்த நாட்டை இந்த உலகின் சொர்க்க பூமியாக உங்களால் மாற்ற முடியும். இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு சரியான மருந்து சமஷ்டி முறைமையே ஆகும். தயவுசெய்து இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள். ஆபத்தை உணரும்போது, தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்வதுபோல பிரச்சினைகள் இருக்கும்போது அவை இல்லை என்று கூறி அவற்றில் இருந்து விலகி ஓடுவது முட்டாள்த்தனமானது.” எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.