அவுஸ்திரேலியா வாழ் தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட, அவுஸ்திரேலியாவின் நியூ வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர், ஹக் மெக்டெர்மொட், இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை தான் உறுதிப்பட நம்புவதாகத் கூறியுள்ளதற்கு, சீமான் ஆதரவளித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடத்தப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், கடந்த மே-18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி அவுஸ்திரேலியா வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளனர்.
அப்போது இதில் கலந்து கொண்ட, அவுஸ்திரேலியாவின் நியூ வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஹக் மெக்டெர்மொட், இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை தான் உறுதிப்பட நம்புவதாகவும், இலங்கை அரசின் இந்த மனித உரிமை மீறல் செயலுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்று தரும் வரை, தொடர்ந்து தனது குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.மேலும், நினைவேந்தல் குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், `இலங்கையில் தமிழ் மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இனப்படுகொலையில், நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட அனைவருமே மொழி, கலாசாரம், மத நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் மரபுகள் அடிப்படையில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த இனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்க வேண்டும். இலங்கை அரசால் நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையை நாம் ஒருபோதும் மறக்காமல் இருக்க பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச சமூகம் நீதி வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் நீதியை வேண்டி நிற்கும் இலங்கைத் தமிழர்களுக்குத் தனது முழு ஆதரவை தெரிவிப்பதோடு, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் அனைத்து விதமான போராட்டங்களிலும் உடன் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஹக் மெக்டெர்மொட்டின் இந்தக் கருத்துக்கு, அவுஸ்திரேலியா வாழ் சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இலங்கையில் இனப்படுகொலை நடத்தப்படவில்லை என்பதை உறுதிப்பட தெரிவித்து வருகின்றனர்.
மேலும், உலக நாடுகளில் வசிக்கும் சிங்களவர்களை ஒன்றிணைத்து, அவருக்கு எதிராக இணைய வழி கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி வருகின்றனர்.
ஹக் மெக்டெர்மொட்டின் கருத்துகளை அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் ஏற்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.இந்த கையெழுத்து இயக்கத்தில் சுமார் 10,000 சிங்களவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஹக் மெக்டெர்மொட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, அவருக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.
அதில், இலங்கைத் தமிழர்களுக்கென உலக அரங்கில் ஆதரவு கரம் நீட்டவோ, குரலெழுப்பவோ யாரும் இல்லாத சூழலில், அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஹக் மெக்டெர்மொட் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகிறார்.
அண்மையில் நடந்த நினைவேந்தல் நிகழ்வில், உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் எனச் சொல்ல மறுத்து போர்க் குற்றம் எனக் குறிப்பிட்டுப் பேசும் சூழலில், ஹக் மெக்டெர்மொட் அங்கு நடத்தப்பட்டது இனப்படுகொலையே என உறுதிப்படக் கூறி வருகிறார்.
அவரின் பேச்சை ஏற்க இயலாத அவுஸ்திரேலியா வாழ் சிங்களவர்கள் அவரின் கருத்துக்கு எதிராகப் பேசியுள்ளதோடு, அவருக்கு எதிராகக் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.
ஒன்றரைக் கோடி மக்கள் தொகை கொண்ட சிங்களவர்கள் நடத்திவரும் கையெழுத்து இயக்கத்தில் 10,000 பேர் கையெழுத்திட்டுள்ள நிலையில், ஹக் மெக்டெர்மொட்டுக்கு ஆதரவாக சுமார் 5,000 கையெழுத்துகளே போடப்பட்டிருக்கின்றன.
தமிழர்களுக்காக ஒலிக்கும் ஹக் மெக்டெர்மொட்டின் கருத்துக்கு ஆதரவாக தமிழ் மக்களை கையெழுத்து இயக்கத்தில் பங்கு கொள்ள அழைப்பதாக கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், சீமானின் காணொலி வெளியானதற்குப் பிறகு, சுமார் 1,25,000 கையெழுத்துகளை இயக்கம் எட்டியுள்ளது.
சீமானின் காணொலி வெளியானதற்குப் பிறகு, தனக்கு அளிக்கப்பட்ட ஆதரவு பெருகியதைத் தெரிந்துகொண்ட ஹக் மெக்டெர்மொட், சீமானுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் இனப்படுகொலை என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படுவது கட்டாயமாகும்.இலங்கை அரசின் இனப்படுகொலை செயலைக் கண்டித்து உலக நாடுகளின் அரசாங்கங்கள் நீதி வழங்க முன்வர வேண்டும். எனக்கு எதிராக சிங்களவர்களால் நடத்தப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்டுவரும் தமிழ் மக்களின் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த சீமான் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும், ஆதரவு வழங்குவதற்காக மின்னஞ்சல், தொலைபேசி எனப் பல நூறு அழைப்புகள் வந்துள்ளதை எண்ணி பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சீமான் உள்ளிட்டோருடன் இணைந்து இலங்கையில் நடைபெற்ற அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் பெருமிதம் கொள்வதாகவும், இலங்கை அரசாங்கத்தால் எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் நான் தொடர்ந்து இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவேன் என குறிப்பிட்டுள்ளார்.
நன்றி:சுடர் செய்தி
நன்றி:சுடர் செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.