
கரவெட்டி மற்றும் வவுனியா வடக்குப் பிரதேச சபைகளில் சிங்களக் கட்சிகள் ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக - இந்த இரண்டு சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்கும் என்று கூறப்படுகிறது.‘தமிழர் மண்ணில் பேரினவாத கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். அவ்வாறான சூழல் ஏதாவது சபைகளில் உருவானால் அந்த இடத்தில் தமிழர்கள் ஆட்சி அமைப்பதற்கே ஆதரவளிப்போம். அது ஒருவேளை கூட்டமைப்பாக இருந்தாலும் தமிழ்த் தேசத்தின் நலன் கருதி ஆதரவளிப்போம்’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தின் கரவெட்டி பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 9 ஆசனங்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தலா 7 ஆசனங்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலா 3 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 2 ஆசனங்களும் உள்ளது. கரவெட்டி பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி முயற்சித்து வருகின்றது. ஏனைய கட்சிகளுடன் பேச்சுக்களையும் நடத்தி வருகின்றது.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்குப் பிரதேச சபையின் 26 ஆசனங்களில், 12 ஆசனங்கள் சிங்கள உறுப்பினர்களுடையது. எஞ்சிய 14 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 8 ஆசனங்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தலா 3 ஆசனங்களும் உள்ளன.இவ்வாறானதொரு நிலையிலேயே, தெற்கு கட்சிகள் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு தயார் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.