
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனின் கை ஓங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இவை தமிழகத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கான அறிகுறியாக கருதப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியான அவரது ஆர்.கே நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகார்களால் தள்ளிவைக்கப்பட்டது.
அதற்கு பிறகு நீதிமன்ற தலையீட்டால் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைப்பு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, ரெய்டு நடவடிக்கைகள், 2ஜி வழக்கு தீர்ப்பு என்று தமிழக அரசியல் களத்தில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது.இருப்பினும், தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் களமிறங்கிய டி.டி.வி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார். மாநிலத்தில் ஆட்சி கையில் இருந்தும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டும் அதிமுக தினகரனுக்கு அடுத்த இடத்திலேயே இருக்கிறது. இதனை மாநிலம் முழுவதிலும் உள்ள டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சமீபகாலங்களில் நடந்த இடைத்தேர்தல்களின் ஆளும்கட்சி தோற்றதில்லை என்பதையும், பல ஆண்டுகளுக்கு பிறகு சுயேச்சை ஒருவர் வெற்றி பெற போகிறார் என்பதும் தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுபோல, கடந்த கால மனக்கசப்புகளை எல்லாம் மறந்துவிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து இருக்கும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகளின் ஆதரவோடு களமிறங்கியும் திமுக மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது. இவர்களுக்கு அடுத்ததாக களத்தில் இருக்கும் முக்கிய கட்சியான பா.ஜ.க தற்போது உ.பி.,குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்களில் பெருவாரியான வெற்றிகளை பெற்று இருந்தாலும், இந்த இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது.தமிழகத்தில் நடக்கப்போகும் அரசியல் மாற்றங்களுக்கான அச்சாரமே ஆர்.கே நகர் தேர்தல் தான் என்று அனைவரும் சொல்லிவந்த நிலையில் அந்த தேர்தல் தினகரனுக்கு ஆதரவானதாக மாறி இருப்பது அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மீண்டும் அதிமுக தொண்டர்கள் டி.டி.வி தினகரன் அணிக்கு திரும்ப யோசித்து வருகின்றனர் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. வரலாறு காணாத பணப்பட்டுவாடா, தேர்தல் விதி மீறல்கள் என புகார்கள் அணிவகுக்கும் வேளையில் இத்தனை குற்றச்சாட்டுகள் இருந்தும் தினகரனுக்கு வாக்களித்து இருப்பது தமிழகத்தில் ஆளும்கட்சி, எதிர்கட்சி, மத்தியில் ஆளும் பாஜக ஆகியவற்றின் மீது மக்கள் கோபமாக இருப்பதையே காட்டுகிறது.இந்நிலையில், ஆர்.கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வாங்கி இருக்கும் வாக்குகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வரும் நிலையில் கணிசமான வாக்குகள் பெற்று டி.டி.தினகரன், மதுசூதனன், மருது கணேஷ் ஆகிய வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் அணி மற்றும் அதிமுக சார்பில் கோடி கோடியாக பணப்பட்டுவாடா நடந்ததாக சொல்லப்படும் நிலையில், தி.மு.க போல எதிர்கட்சி அந்தஸ்தோ, மத்தியில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க போலவோ எந்த வித பின்புலமும் இல்லாமல் நாம் தமிழர் வாங்கி உள்ள ஓட்டுகள் அரசியல் களத்தில் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் பெரும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இளைஞர்கள் பெருமளவில் அந்த கட்சிக்கு ஆதரவளிப்பதை சுட்டிக்காட்டுகிறது. தேர்தல் பிரச்சாரத்திலும், தனிப்பட்ட பேட்டிகளிலும் கூட திமுக, அதிமுக கட்சிகளையும், ஆட்சிகளையும் விமர்சித்தவர் தினகரன் அணியை பெரிதாக விமர்சிக்கவில்லை என்பதும், அதுபோல தினகரனும் நாம் தமிழரை பெரிதாக சீண்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.இதனால் அடுத்த சட்டசபை தேர்தலில் தினகரன் தலைமையிலான அணியும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.