
ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) இன்று காலை பிரான்சில் காலமானார். ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பிரான்சில் உள்ள மருத்துவமனையில் காலமானார். கவிஞரும், எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்.
ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலகட்டத்தில் சுந்தர் என அழைக்கப்பட்ட அவர், ஈழப்போராட்டத்தில், முதன்முதலில் சயனைட் அருந்தி உயிர்த்தியாகம் செய்த, ஈழப் போராட்ட முன்னோடியான பொன்.சிவகுமாரனுடன் இணைந்து செயற்பட்டவர். 1990களின் முற்பகுதியில் பிரான்சில் குடியேறிய அவர், அங்கிருந்து கடைசி வரை ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பணியாற்றி வந்தவராவார்.
1972 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான துண்டறிக்கையை விநியோகித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதான மூன்று தமிழ் இளைஞர்களில் கி.பி.அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். அதையடுத்து, ஈரோஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய அவர், 1990களின் ஆரம்பத்தில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார்.
அங்கிருந்து அவர், பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றியதுடன், ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தவர். கி.பி.அரவிந்தன் பல கவிதைத் தொகுதிகளையும், நூல்களையும் வெளியிட்டுள்ளார். அப்பால்தமிழ் என்ற இணைய சஞ்சிகையை நடத்திய அவர், புதினப்பலகை இணையத்தளத்தின் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.இவர் நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.