புளியங்கூடல்.கொம் PULIYANKOODAL.COM
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
20 செப்டம்பர் 2023
யாழ்,நீதிமன்றமும் தடை கோரிய வழக்கை நிராகரித்தது!
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண சிறீலங்கா பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண சிறீலங்கா பொலிசாரால் நேற்று முன்தினம்(18) நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆறு பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாக குறிக்கப்பட்டு பொலிசார் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவுகூறும் செயற்பாடு இலங்கை சோசலிச குடியரசின் வர்த்தமானி 1721/2ஐயும், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தையும் மீறுவதாகவும் உள்ளது என்றும், நடத்தப்படும் பேரணியை 1979 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைச் சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும் என்றும் பொலிசார் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்றைய தினம்(20) காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது இவ் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதவான் நீதிமன்ற நீதவான் தெரிவித்தார். இவ் வழக்கில் எதிர் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் முன்னிலையாகினார் என செய்திகள் தெரிவித்தன.
17 ஜனவரி 2023
யாழ்ப்பாண அரச அதிபராக சுருவிலூர் சிவபாலசுந்தரன் நியமனம்!
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை நியமனம் செய்வதற்கான அனுமதியை 16 ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.தீவகத்தின் சுருவிலை சொந்த இடமாக கொண்ட இவர் பிரபல கவிஞரும்(கவிஞர் ஆரணி) ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
05 ஜனவரி 2023
சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்-கஜேந்திரகுமார்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை சந்திக்கத் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலளார் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என நோக்காது, ஆட்சி மாற்றத்திற்கான முன்னேற்பாடாக இதனைக் கருதி வாக்களிக்க வேண்டும் எனக் கோரினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள விரும்பாது. தேர்தல் எதையும் வைக்காமல் இருந்தால் சர்வதேசம் தவறாக கருதும் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலை அறிவித்து பின்னர் வழக்குகளை தாக்கல் செய்து தேர்தலை இழுத்தடிக்க முற்படலாம்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதாக இருந்தால் நிலையான அரசாங்கம் அமையவேண்டுமென சர்வதேச நிதி நிறுவனங்கள் விரும்புகின்றன.
நாடாளுமன்ற தேர்தலை நடத்தாமல் உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவது நெருக்கடியை அதிகரிக்கும். ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும்.
ஒற்றையாட்சிக்குள் ஏக்கியராஜ்ஜியவை ஏற்றவர்கள் 13ஆம் திருத்ததை ஏற்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் வாக்குபெறுவதற்காக தற்போது தாயகம் ,தேசியம்,சுயநிர்ணயம் என்கிறார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி சிறிலங்கா அரசாங்கத்தின் கூலிகள் - போலித் தமிழ் தேசிய வாதிகள் இவர்களை இனங்கண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டார்.
மாவீரர் துயிலும் இல்லங்களை சிதைக்காதே!
ஆக்கிரமிப்பு இராணுவமே மாவீரர் துயிலும் இல்லங்களை சிதைக்காதே ஸ்ரீலங்கா இராணுவமே எமது மண்ணில் இருந்து வெளியேறு' என்ற கோஷங்களை எழுப்பியவாறு குறித்த வாசகம் எழுதிய பதாகையை கையில் ஏந்தியவாறு மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ப.அரியநேத்திரன் ஞா.சிறிநேசன்,மாநகர மேயர் தி.சரவணபவன் செங்கலடி பிரதேச சபை தவிசாளர் சி.சர்வானந்தன் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் சி.வவானந்தன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட பொறுப்பாளர் த.சுரேஸ் ஏற்பாட்டு குழுவின் உறுப்பினர்களான கு.வி.லவக்குமார் எஸ்.நிதர்சன் மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
துயிலும் இல்லத்துக்கு முன்பாக ஒன்று கூடியவர்கள் “இராணுவமே வெளியேறு”, “துயிலும் இல்லங்களை அபகரிக்காதே”, “வன இலகா என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பு செய்யாதே”, “மாவீரர்களை அவமதிக்காதே”, “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”, “ரணில் அரசே பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டாதே” போன்ற கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு வன பாதுகாப்பு திணைக்களம், “தொப்பிகல ஒதுக்கு காடு” என பெயர் பொறித்து துயிலும் இல்லத்தில் திடீரென நடப்பட்டதாக கூறப்படும் பெயர் பலகையையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கற்கலால் எறிந்து சேதப்படுத்தி அப்பகுதியில் இருந்து பிடுங்கி அகற்றினர். அங்கு நடப்பட்டிருந்த மரக்கன்றுகளும் பிடுங்கப்பட்டன.
கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த நவம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டு 25 ஆம் 26 ஆம் திகதிகளில் மாவீரர் தினம் தொடர்பான பதாதை காட்சிப்படுத்தப்பட்ட போது அவை கிழித்தெறியப்பட்டிருந்தன.
பின்னர் குறித்த பிரதேசத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகளை அரச இராணுவ புலனாய்வாளர்கள் மேற்கொண்டாக தெரிவித்து தரவை ஏற்பாட்டுக் குழுவினருக்கும் புலனாய்வு பிரிவினருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
மரக்கன்றுகள் நடும் விடயத்திற்கும் தமக்கும் தொடர்பில்லையென வாழைச்சேனையில் அமைந்துள்ள வன இலகா தினைக்கள அதிகாரி தெரிவித்திருந்தார். தற்போது அதே இடத்தில் குறித்த திணைக்கள அமைச்சின் பெயர் தாங்கிய பெயர் பலகை இடப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக இரு சாராருக்கும் இடையில் மாறி மாறி சச்சரவுகள் இடம்பெறுவது தொடர் கதையாகவுள்ளது. மேற்படி விடயத்தினை கண்டித்தும் குறித்த செயற்பாட்டினை நிறுத்தி தருமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
எனவே மாவீரர் துயிலுமில்லங்களை ஆக்கிரமிப்பு செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிடும் வரையில் அரசாங்கத்துடனனான பேச்சுவார்த்தைக்கு செல்வதில்லை என்ற தீர்மானத்தை தமிழ்க் கட்சிகள் எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.
04 ஜூன் 2022
புளியங்கூடல் செருத்தனைப்பதி மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம்!
புளியங்கூடல் செருத்தனைப்பதியில் எழுந்தருளி அடியார்களுக்கு அருளாட்சி புரிந்து வரும் ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் கொடியேற்றத் திருவிழா எதிர்வரும் 10.06.2022 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பதினெட்டு தினங்கள் விழா சிறப்புற நடைபெறும்.25.06.2022 சனிக்கிழமை இரதோற்சவமும் 26.06.2022 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெற்று 27.06.2022 திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழாவுடன் வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவுறும்.
குறிப்பு:மேலதிக விபரங்களை ஆலய நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்ட மேலே உள்ள பிரசுரத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
18 மே 2022
இனப்படுகொலை குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும்!
இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
”இன அழிப்புப் போரின்போது, மக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டது. இசைப்பிரியா போன்றவர்கள் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்டனர். பாலச்சந்திரன் போன்ற சிறார்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.
உணவுத் தட்டுப்பாடு மற்றும் மருந்து தட்டுப்பாடு என்பன இன அழிப்புப் போரில் தமிழர்களுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன.
எனவே, இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும்.
திட்டமிட்ட அடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படும். தமிழர்களிடமிருந்து தலைவர்களைத் தேடுங்கள், மாறாக முகவர்களைத் தேட வேண்டாம். எங்களது தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி தீர்வை முன்வைக்கவும்” என்றார்.
27 பிப்ரவரி 2022
சிறீலங்காவிற்கு கொத்துக் குண்டுகளை கொடுத்ததா உக்ரெய்ன்?
சிங்களம் வீசிய கொத்துக்குண்டு |
26 பிப்ரவரி 2022
"இறந்தாலும் ஒன்றாக இறப்போம்"உக்ரெய்னில் துப்பாக்கி ஏந்திய திருமண ஜோடி!
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் வெடிகுண்டு சத்தங்களுக்கு நடுவே ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளது. இல்லற வாழ்க்கையில் இணைய வேண்டிய இந்த ஜோடி திருமணமான அடுத்த சில மணிநேரத்தில் நாட்டை பாதுகாக்க கைகளில் துப்பாக்கி ஏந்திய சம்பவம் நடந்துள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து குண்டுமழை பொழிந்து வருகிறது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உலக நாடுகளிடம் உக்ரைன் உதவி கேட்டு வருகிறது. இந்நிலையில் தான் உறவினர்கள் சூழ, அச்சதை தூவி, வாழ்த்து மழையில் நனைந்தபடி இல்லற வாழ்க்கையில் இணைய வேண்டிய ஜோடி ஒன்று உக்ரைனில் வெடித்து சிதறும் வெடிகுண்டு சத்தங்களுக்கு நடுவே திருமணம் செய்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:உக்ரைன் கீவ் நகரை சேர்ந்தவர் யார்னா அரிவா (வயது 21). கீவ் நகர கவுன்சில் துணை தலைவர். சாப்ட்வேர் என்ஜினீயர் ஸ்விடோஸ்லவ் புரிசின்(24). இவர்கள் 2 பேருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் மே மாதம் 6ம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ரஷ்யாவின் வால்டை மலையில் பிறந்து ஓடும் டினைபர் ஆற்றங்கரையோரம் உள்ள சொகுசு ரெஸ்டாரண்ட்டில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.இதற்கிடையே தான் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. நேற்று முன்தினம் போர் துவங்கியது. அன்று முதல் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் முன்னேறி செல்கின்றன.இந்நிலையில் தான் யார்னா அரிவா. ஸ்விடோஸ்லவ் புரிசின் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. போரின் 2ம் நாளான நேற்று வெடிகுண்டுகள் சத்தங்களுக்கு நடுவே கீவ் நகரில் உள்ள தூய மைக்கேல் தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில் இருவரின் குடும்பத்தினர், சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.இதுபற்றி யார்னா அரிவா இவர் கூறுகையில், ‛‛உக்ரைனில் நிலவும் சூழல் பயங்கரமானதாக உள்ளது. இது கடினமான காலக்கட்டம். நாங்கள் இறந்தாலும் இறக்கலாம். இதனால் அதற்கு முன்பு இருவரும் சேர வேண்டும் என திருமணம் செய்து கொண்டுள்ளோம். நாங்கள் எங்கள் மக்களையும், நாட்டையும் பாதுகாக்க விரும்புகிறோம் '' என உருக்கமாக கூறினார்,இதையடுத்து இருவரும் கீவ் நகரில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு மையத்துக்கு சென்றனர். நாட்டுக்காக ரஷ்ய படையை எதிர்த்து போரிட உள்ளதாக பெயர்களை பதிவு செய்தனர். அதன்பிறகு துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியை துவக்கினர். இதன்மூலம் திருமணம் முடிந்த கையோடு கையில் துப்பாக்கி ஏந்தி ரஷ்யாவை எதிர்த்துள்ளனர். இவர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்தோடு, பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.மேலும், ‛‛ரஷ்யா போர் நடவடிக்கையை கைவிடும்போது நாடு இயல்பு நிலைக்கு வரும். ரஷ்ய வீரர்கள் இல்லாத உக்ரைன் நாட்டில் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை துவங்குவர். இது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது அனைவரையும் அழைத்து எங்கள் திருமண விழாவை கொண்டாடுவோம்'' என துப்பாக்கி ஏந்திய கையோடு யார்னா அரிவா-ஸ்விடோஸ்லவ் புரிசின் ஜோடி நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)